தில்லியில் வரும் செப்டம்பர் 23, 24 ஆகிய தேதிகளில் மோரீசியஸ் சர்வதேச திருக்குறள் ஃபவுண்டேஷன், சென்னை ஆசியவியல் நிறுவனம் ஆகியவை இணைந்து மூன்றாவது உலகத் திருக்குறள் மாநாட்டை நடத்துகின்றன.
இது தொடர்பாக தில்லி சாணக்கியபுரியில் உள்ள யுனஸ்கோ அரங்கில் புதன்கிழமை இரவு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், மோரீசியஸ் சர்வதேச திருக்குறள் பவுண்டேஷனின் தலைவரும், அந்நாட்டின் முன்னாள் கல்வி அமைச்சருமான ஆறுமுகம் பரசுராமன், சென்னை ஆசியவியல் நிறுவனத்தின் இயக்குநர் ஜி. ஜான் சாமுவேல், பாஜகவின் முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் தருண் விஜய், தில்லி பல்கலைக்கழக தற்கால இந்திய மொழிகள் மற்றும் இலக்கிய ஆய்வுகள் துறைத் தலைவர் கோ. ராஜகோபால் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது தருண் விஜய் பேசுகையில், "திருக்குறள் கூறும் செய்தியை தமிழகம் மற்றும் தமிழ் பேசும் மக்களிடம் மட்டும் நிறுத்திவிடக் கூடாது.
அதை நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களுக்கும் பரப்ப வேண்டும். இந்தத் திருக்குறள் மாநாட்டுக்கு அனைத்து மாநிலங்களைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களையும் அழைக்கவுள்ளோம். திருக்குறளில் உள்ள நல்ல செய்திகளைப் பரப்ப கல்லூரி மாணவர்களை ஈடுபடுத்த வேண்டும். மேலும், திருவள்ளுவர் சிலையை பாரிஸில் உள்ள யுனஸ்கோ தலைமையகத்திலும், தில்லி பல்கலைக்கழக வளாகத்திலும் நிறுவ நடவடிக்கை எடுப்பேன்' என்றார்.