Join THAMIZHKADAL WhatsApp Groups
5 நிமிடத்தில் 150 திருக்குறள்- சாதித்த 8 வயது மாணவிக்கு வீடு பரிசளித்த கலெக்டர்
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வட்டம், கல்லாங்குத்து கிராம ஊராட்சி, காவேரிப்பாக்கம் கிராமத்தில் வசித்து வருகிறார் 8 வயதான மாணவி தர்ஷினி. இவரது பெற்றோர் ஆணைக்குட்டி - சத்யா. இருவரும் விவசாய கூலி பணியாளராக உள்ளனர். தர்ஷினி, கல்லாங்குத்து ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வருகிறார். அதே பள்ளியில் 1 ஆம் வகுப்பில் தர்ஷினியின் தங்கையும், யு.கே.ஜி. படிக்கும் ஒரு தம்பியும் உள்ளனர். இவர்களது குடும்பம் தற்போது தாத்தா வீட்டில் வசித்து வருகிறது. ஏழ்மையான நிலையில் வசித்து வந்தாலும் தர்ஷினி படிப்பின் மீது ஆர்வம் கொண்டவராக திகழ்ந்துள்ளார்.
கல்லாங்குத்து அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்களை ஆசிரியர்கள் திருக்குறள் வாசித்து, ஒப்பிப்பதை ஊக்குவித்து வந்துள்ளார்கள்
மாணவி தர்ஷினி ஒன்றாம் வகுப்பு படிக்கும் போது மாணவர்களுக்கு இடையே நடத்தப்பட்ட திருக்குறள் ஒப்பிக்கும் போட்டியில் 5 நிமிடங்களில் 27 திருக்குறள் ஒப்பித்துள்ளார். இதனை பார்த்த ஆசிரியர்கள் தர்ஷினிக்கு கூடுதல் பயிற்சி அளித்துள்ளார்கள். இதன் அடிப்படையில் தர்ஷினி 2 ஆம் வகுப்பு படிக்கும் போது 4 நிமிடங்களில் 110 திருக்குறள் ஒப்பித்து சாதனை புரிந்துள்ளார். மேலும், மாணவி தர்ஷினிக்கு ஆசிரியர்கள் பயிற்சி அளித்தும், அவரை ஊக்கப்படுத்தியும் உள்ளார்கள். அந்த பயிற்சியின் மூலம் 5 நிமிடங்களில் 150 திருக்குறள் ஒப்பிக்கும் அளவிற்கு முன்னேற்றம் அடைந்தார்.
இதனை அங்கீகரிக்கும் வகையில் சென்னையில் இயங்கி வரும் டிரம்ப் வேல்டு ரெக்கார்ட் நிறுவனத்தில் விண்ணப்பம் செய்துள்ளார்கள். மாணவி தர்ஷினியின் சாதனையை மேற்கண்ட உலக சாதனை நிறுவனம் அங்கீகரிக்க ஒப்புதல் வழங்கியுள்ளது. அதனை தொடர்ந்து ஜீலை 18ந்தேதி மாவட்ட ஆட்சியரக கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சியர் கந்தசாமி, தலைமையில் மாணவி தர்ஷினியின் உலக சாதனை முயற்சி நடைபெற்றது. இதனை அங்கீகரிக்க டிரம்ப் உலக சாதனை நிறுவனத்தின் பிரநிதிகள் வருகை தந்துயிருந்தனர். அனைவர் முன்பும் திருக்குறள்களை சொல்லத்துவங்கினார் மாணவி தர்ஷினி. 289 விநாடிகளில் (4.49 நிமிடங்கள்) 150 திருக்குறளை ஒப்பித்து உலக சாதனை புரிந்தார்.
இந்த சாதனையை அங்கீகரித்து அந்த நிறுவனத்தின் அதிகாரிகள் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மாணவி தர்ஷினியிடம் சான்றிதழ் வழங்கப்பட்டது. மேலும், மாவட்ட ஆட்சியர் அவர்கள் மாணவி தர்ஷினிக்கு பதக்கம், கேடயம் மற்றும் தங்கச் சங்கிலி அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். மாணவி தர்ஷினி திருக்குறள் ஒப்பிக்கும் போது மிகத் தெளிவாக வார்த்தைகளை உச்சரித்தார்.
மாவட்ட ஆட்சியர் மாணவி தர்ஷினியின் குடும்பத்தினர் பற்றி விசாரித்தபோது, சொந்த வீடு இல்லாமல் தனது தந்தை வழி தாத்தா வீட்டில் கூட்டுக் குடும்பமாக நெருக்கடியான இடத்தில் வசித்து வருவதை அறிந்தார். உடனடியாக, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் மாவட்ட திட்ட அலுவலர் ஜெயசுதா மூலமாக மாணவி தர்ஷினி குடும்பத்திற்கு வந்தவாசி ஊராட்சி ஒன்றியம், கல்லாங்குத்து கிராம ஊராட்சி, காவேரிப்பாக்கம் கிராமத்தில் முதலமைச்சரின் பசுமை வீடுகள் திட்டத்தன் கீழ் புதிய வீடு கட்டுவதற்கான ஆணை வழங்கி பாராட்டு தெரிவித்தார்.
8 வயது சிறுமி தனது திறமையால் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்ததோடு, அந்த சாதனை மூலமாக தாங்கள் வாழ மாவட்ட ஆட்சியர் மூலமாக இலவச வீட்டை பெற்று பெருமை சேர்த்துள்ளார்.