Wednesday, July 31, 2019

டேராடூன் ராணுவக் கல்லூரியில் சேர்க்கை: விண்ணப்பிக்க செப்.30 கடைசி

உத்தரகண்ட் மாநிலத்தின் டேராடூனில் உள்ள இந்திய ராணுவக் கல்லூரியில், அடுத்த ஆண்டு ஜூலை மாதம் சேருவதற்கான தேர்வு, சென்னையில் வரும் டிசம்பர் 1, 2 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி செப்டம்பர் 30 ஆகும்.
எழுத்து தேர்வு அடிப்படையில், தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். அவர்களுக்கு மட்டும் 2020-ஆம் ஆண்டு ஏப். 7-இல் நேர்முகத் தேர்வு நடைபெறும். தேர்வுக்கான விண்ணப்பப் படிவம், தகவல் தொகுப்பேடு, முந்தைய தேர்வுக்கான வினாத்தாள் தொகுப்பு போன்றவற்றை கமாண்டன்ட், ராஷ்டிரீய இந்திய ராணுவக் கல்லூரி, டேராடூன், உத்தரகண்ட் - 248003 என்ற முகவரிக்கு, விரைவு தபால் வழியே உரிய விண்ணப்ப கட்டணத்தை அனுப்பி பெறலாம் அல்லது www.rimc.gov.in என்ற இணையதளம் மூலமாக பெறலாம்.


விண்ணப்பப் படிவம் மற்றும் தகவல் தொகுப்பேடு, சென்னையில் உள்ள தேர்வாணைய அலுவலகத்தில் வழங்கப்படாது. தனிப்பட்ட முறையில் அச்சிடப்பட்ட, நகல் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
விண்ணப்பதாரர்களின் பெற்றோர் அல்லது பாதுகாப்பாளர், தமிழகத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் 2020-ஆம் ஜூலை 1-ஆம் தேதியன்று 11 ஆண்டு ஆறு மாதம் வயது நிரம்பியவராகவும், 13 வயதை அடையாதவராகவும் இருக்க வேண்டும். அதாவது, அவர்கள் 2.7.2007-க்கு முன்னதாகவும் 1.1.2009-க்கு பின்னதாகவும் பிறந்திருக்கக் கூடாது. இந்த வயது வரம்பிலிருந்து எந்த தளர்வும் கிடையாது. விண்ணப்பதாரர் ராணுவக் கல்லூரியில் சேர அனுமதிக்கப்படும்போது, அதாவது 1.7.2020-இல் அங்கீகரிக்கப்பட்ட பள்ளியில் ஏழாம் வகுப்பு படிப்பவராகவோ அல்லது ஏழாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராகவோ இருத்தல் வேண்டும்.


பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்களை, தேர்வு கட்டுப்பாடு அலுவலர், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், பூங்கா நகர், சென்னை என்ற முகவரிக்கு வரும் செப்டம்பர் 30-ஆம் தேதிக்குள் வந்து சேர வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு ராஷ்டிரீய இந்திய ராணுவக் கல்லூரி (www.rimc.gov.in ) என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என கல்லூரியின் தேர்வுக் கட்டுப்பாடு அலுவலர் தெரிவித்துள்ளார்.

Popular Feed

Recent Story

Featured News