குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க வரும் ஞாயிற்றுக்கிழமை கடைசிநாளாகும். இந்தத் தேர்வுக்கு இதுவரை 10 லட்சத்துக்கும் அதிகமானோர் விண்ணப்பம் செய்துள்ளனர்.
இதுகுறித்து, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:-
கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்கள் குரூப் 4 பிரிவின் கீழ் வருகின்றன. இந்தப் பிரிவில் 6 ஆயிரத்து 491 காலியிடங்கள் உள்ளன. இந்தக் காலியிடங்களுக்கான எழுத்துத் தேர்வில் பங்கெடுக்க ஜூன் 14-ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, டி.என்.பி.எஸ்.சி., இணையதளத்தில் தேர்வர்கள் விண்ணப்பம் செய்து வந்தனர். இந்த நிலையில், விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் வரும் ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவடைகிறது.
இந்தத் தேர்வுக்கு இதுவரை சுமார் 10 லட்சத்துக்கும் அதிகமானோர் விண்ணப்பித்துள்ளனர். தேர்வுக்கு வரும் ஞாயிற்றுக்கிழமை இரவு 11.59 மணி வரை விண்ணப்பம் செய்யலாம். தேர்வுக் கட்டணத்தை ஜூலை 16-ஆம் தேதி வரை செலுத்தலாம்.
விண்ணப்பதாரர்கள் அவர்களின் பயனாளர் குறியீடு (USER ID) மற்றும் கடவுச் சொல் (Password) ஆகியன மறந்து விட்டால் அதனை மிகவும் எளிமையாக மீட்டெடுக்க தேர்வாணைய இணைய தளத்தில் (www.tnpscexams.in) இணைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. பயனாளர் குறியீடு, கடவுச்சொல், புகைப்படம் மற்றும் கையொப்பம் பதிவேற்றம், நிரந்தரப் பதிவு தொடர்பான கேள்விகளுக்கு அலுவலகப் பணி நேரத்தில் உதவி மைய எண்களை (044-25300336, 25300337, 25300338, 25300339) தொடர்பு கொள்ளலாம்.