Join THAMIZHKADAL WhatsApp Groups

பள்ளிக் கல்வித் துறை சார்பில் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வரும் நீட் தேர்வுக்கான இலவசப் பயிற்சி மையங்களின் எண்ணிக்கை நிகழாண்டு முதல் 506 -ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு நீட் பயிற்சி கடந்த இரண்டு ஆண்டுகளாக பள்ளிக் கல்வித் துறையின் மூலம் அளிக்கப்பட்டுவருகிறது. இந்தப் பயிற்சி வகுப்புகளில் படித்த 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களில் மருத்துவப் படிப்புகளில் இடம்பிடித்தவர்களின் எண்ணிக்கை ஒற்றை இலக்கத்திலேயே உள்ளது என விமர்சனம் எழுந்துள்ளது.
இந்த நிலையில், பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் கண்ணப்பன், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் நீட் பயிற்சி மையங்கள் தொடர்பாக அண்மையில் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளில் படிக்கும் மாணவர்கள் நீட், ஜே.இ.இ., சி.ஏ. போன்ற போட்டித் தேர்வுகளுக்கு தயார் செய்யும் வகையில், தமிழக அரசால் தனித்துவம் வாய்ந்த பயிற்சி அளிக்கப்படும் எனப் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து நிகழ் கல்வியாண்டில் நீட், ஜே.இ.இ., போட்டித் தேர்வுகளுக்கு அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு ஆகஸ்ட் முதல் வாரத்தில் இலவசப் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்படவுள்ளன.
ஏற்கனவே ஒன்றியத்துக்கு ஒரு மையம் என்ற வகையில் மொத்தம் 412 மையங்களில் பயிற்சி அளித்துவரும் நிலையில், இந்த ஆண்டு கூடுதலாக 94 பயிற்சி மையங்களில் நீட் போட்டித் தேர்வுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
மதிப்பெண் அடிப்படையில்... இதற்கு பிளஸ் 2 வகுப்பு மாணவர்கள் பிளஸ் 1 வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலும், பிளஸ் 1 வகுப்பு மாணவர்கள் பத்தாம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலும் தேர்வு செய்யப்பட வேண்டும். மேலும் இதர வகுப்பினர், பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த மாணவர்கள் 60 சதவீத மதிப்பெண்களும், ஆதிதிராவிடர், பழங்குடியினர், மாற்றுத் திறனாளிகள் 50 சதவீத மதிப்பெண்கள் அடிப்படையிலும், பிளஸ் 2 வகுப்பில் 50 மாணவர்களும், பிளஸ் 1 வகுப்பில் 20 மாணவர்களும் தேர்வு செய்யப்பட வேண்டும்.
ஜே.இ.இ. போட்டித் தேர்வு ஆங்கில வழியில் மட்டும் நடைபெறுவதால், இதற்கு ஆங்கில வழி பயிற்சி மையங்களை மட்டுமே தேர்வு செய்ய வேண்டும். மேலும், இது நேரடி பயிற்சி வகுப்புகளாகவும் நடத்தப்படும். இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் பாட ஆசிரியர்கள் பயிற்சி மையங்களில் மாணவர்களுக்கு பயிற்சிகளை வழங்குவர் என அதில் கூறப்பட்டுள்ளது.