Monday, July 1, 2019

யோகா - இயற்கை மருத்துவப் படிப்புகள்: ஜூலை 1- இல் விண்ணப்ப விநியோகம்


இயற்கை மருத்துவம் - யோகா படிப்புகளுக்கான விண்ணப்ப விநியோகம் ஜூலை 1-ஆம் தேதி தொடங்குகிறது.
மத்திய அரசின் ஆயுஷ் அமைச்சகம் கடந்த ஆண்டு அனைத்து ஆயுஷ் படிப்புகளுக்கும் நீட் தேர்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்துமாறு சுற்றறிக்கை ஒன்றை மாநில அரசுகளுக்கு அனுப்பியது.

ஆனால் தமிழக அரசு அதற்கான விதிகள் எதுவும் மத்திய அரசு வகுக்கவில்லை என்று கூறி, தமிழக அரசின் கொள்கை நிலைப்பாட்டின் அடிப்படையில் 2018ம் ஆண்டு பிளஸ்2 மதிப்பெண் அடிப்படையிலேயே அரசு மற்றும் தனியார் ஆயுஷ் மருத்துவக்கல்லூரி இடங்களுக்கு கலந்தாய்வு நடத்தியது.



இந்நிலையில் ஆயுஷ் அமைச்சகம் 2018ம் ஆண்டு டிசம்பரில் ஆயுஷ் படிப்புகளுக்கும் நீட் தேர்வு கட்டாயம் என்று சுற்றறிக்கை வெளியிட்டு விதிகளை வகுத்ததுடன், ஆயுஷ் படிப்புகளுக்கு நீட் தேர்வு கட்டாயம் என்று அரசிதழிலும் வெளியிட்டது.

இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் ேயாகா மற்றும் நேச்சுரோபதி(இயற்கை மருத்துவம்) படிப்புக்கு நீட் தேர்வு தேவையில்லை என்று அறிவிப்பு வெளியிட்டது.

இதனால் பிற ஆயுஷ் படிப்புகளுக்கு நீட் தேர்வு கட்டாயம் என்ற நிலை உருவாகியுள்ளது.

ஆனால் அதுதொடர்பாக தமிழக அரசு எந்த முறையான அறிவிப்பையும் வெளியிடவோ விளம்பரப்படுத்தவோ இல்லை.

இதனால் ஆயுஷ் மருத்துவ படிப்புகளில் சேரவிருந்த ஏராளமான மாணவர்கள் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கவில்லை.

இந்நிலையில் மத்திய ஆயுஷ் அமைச்சகத்திடம் நீட் தேர்வில் இருந்து ஆயுஷ் மருத்துவ இடங்களுக்கு விலக்கு கோரி தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது.

இதுதவிர நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து விலக்கு பெறலாம். ஆனால் ஏற்கனவே நீட் தொடர்பான பல வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.



நீட் தேர்வை அமல்படுத்துவதில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருவதால் இந்த ஆண்டு நீட் மதிப்பெண் அடிப்படையில் சித்தா உள்ளிட்ட ஆயுஷ் மருத்துவப் படிப்புகளுக்கு கலந்தாய்வு நடக்கும் என்று கூறப்படுகிறது.

யோகா மற்றும் இயற்கை மருத்துவ படிப்புக்கு விண்ணப்பித்தல் தொடர்பாக இந்தியமுறை மருத்துவம், ஓமியோபதி இயக்கக அதிகாரிகளை தொடர்புகொண்டபோது அவர்கள் கூறியதாவது:

யோகா மற்றும் இயற்கை மருத்துவ தேசிய அளவிலான கவுன்சில் எதுவும் இல்லை.

நீட் தேர்வு அடிப்படையில் யோகா மற்றும் இயற்கை மருத்துவ படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நடத்துவதற்கான விதிகள் எதையும் மத்திய ஆயுஷ் அமைச்சகம் வெளியிடவில்லை.

அதனால் தமிழகத்தில் பிளஸ்2 மதிப்பெண் அடிப்படையில் யோகா மற்றும் இயற்கை மருத்துவ இடங்களுக்கு கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது.

சென்னை அரும்பாக்கத்தில் செயல்பட்டு வரும் அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக்கல்லூரியில் 60 இடங்களும் தனியார் கல்லூரிகளில் 400 இடங்களும் உள்ளன.



அந்த இடங்களுக்கான மாணவர் சேர்க்கைக்கு ஜூலை 1ம் தேதி முதல் விண்ணப்பம் வினியோகிக்கப்படும்.

www.tnhealth.org இணையதளத்திலும் மாணவர்கள் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

பூர்த்தி செய்த விண்ணப்பங்களை ஜூலை 22ம் தேதிக்குள் அரும்பாக்கத்தில் உள்ள இந்திய முறை மருத்துவம், ஓமியோபதி இயக்ககத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

கலந்தாய்வு தேதி இறுதிசெய்யப்படவில்லை. பிற ஆயுஷ் மருத்துவ படிப்புகளான சித்த மருத்துவம், ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி படிப்புகளுக்கு மத்திய ஆயுஷ் அமைச்சகம் ஒப்புதல் அளித்ததும் கலந்தாய்வு நடத்தப்படும். இவ்வாறு இந்தியமுறை மருத்துவம், ஓமியோபதி இயக்கக அதிகாரிகள் கூறினர்.

Popular Feed

Recent Story

Featured News