தனிப்பட்ட குற்ற வழக்கு இருந்தாலும் பதவி உயர்வை நிறுத்தி வைக்கலாம்: உயர்நீதிமன்றம் உத்தரவு - தமிழ்க்கடல்

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Saturday, July 6, 2019

தனிப்பட்ட குற்ற வழக்கு இருந்தாலும் பதவி உயர்வை நிறுத்தி வைக்கலாம்: உயர்நீதிமன்றம் உத்தரவு


தனிப்பட்ட பிரச்னை தொடர்பாக தொடரப்பட்ட குற்ற வழக்கு நிலுவையில் இருந்தாலும் பதவி உயர்வை நிறுத்தி வைக்கலாம் என சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது.
மதுரையைச் சேர்ந்த தென்னரசு தாக்கல் செய்த மனு:
நான் நேரடி சார்பு -ஆய்வாளராகத் தேர்வு செய்யப்பட்டு காவல்துறை பணியில் சேர்ந்தேன். சிறப்பாகப் பணிபுரிந்ததற்காக பல விருதுகளைப் பெற்றுள்ளேன். சில தனிப்பட்ட பிரச்னைகள் காரணமாக என் மீது குற்ற வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை காரணம் காட்டி எனக்கு வழங்கப்பட்ட காவல் ஆய்வாளர் பதவி உயர்வை 2014 ஆகஸ்ட் 18-இல் மதுரை மாநகரக் காவல் ஆணையர் நிறுத்தி வைத்து உத்தரவிட்டார்.அந்த உத்தரவை ரத்து செய்து எனக்கு பதவி உயர்வு மற்றும் பணப் பலன்களை வழங்க உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார்.


இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியன் முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுதாரர் மீது குற்ற வழக்கு நிலுவையில் இருப்பதால், அவரது பதவி உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதோடு மனுதாரருக்கு 2010 ஆகஸ்ட் 11-இல் ஏற்கெனவே ஒரு ஆண்டு சம்பள நிறுத்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இதை எதிர்த்து மனுதாரர் ஏடிஜிபி-யிடம் அளித்த மேல்முறையீடு நிராகரிக்கப்பட்டது. இந்த அடிப்படையிலேயே அவருக்கு பதவி உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் வாதிடுகையில், மனுதாரர் மீதான குற்ற வழக்கு தனிப்பட்ட பிரச்னை காரணமாகப் பதிவானது. அலுவல் பணி சார்ந்தது அல்ல. ஆகவே அதற்காக பதவி உயர்வைத் தள்ளி வைக்க இயலாது என்றார்.


இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, குற்ற வழக்கு நிலுவையில் இருப்பது அல்லது தண்டனை பெற்றது போன்றவை பதவி உயர்வுக்குத் தடை என்றே நீதிமன்றம் கருதுகிறது. இந்த வழக்கிலும் மனுதாரருக்கு துறை ரீதியான தண்டனை வழங்கப்பட்டுள்ளது. மேலும் குற்றவியல் வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. காவல்துறையில் ஆய்வாளர் பதவி உயர்வுக்கு சம்பந்தப்பட்டவரின் பணிப் பதிவேடுகள் மற்றும் நடத்தையை ஆய்வு செய்வது முக்கியமானது.
தண்டனை பெற்ற சார்பு -ஆய்வாளரை, ஆய்வாளர் பதவி உயர்வுக்கு பரிசீலிக்க முடியாது. பணியில் நேர்மை உள்ளவர்களை மட்டுமே பதவி உயர்வுக்கு பரிசீலிக்க வேண்டும். குறிப்பாக சீருடைப் பணிகளில் இவை கட்டாயம் கடைப்பிடிக்கப்பட வேண்டும். இந்த வழக்கில் மனுதாரர் தரப்பில் தன் மீதான குற்ற வழக்கு தனிப்பட்ட பிரச்னை காரணமாகத் தொடரப்பட்டது என கூறப்பட்டுள்ளது. இதைப் பொருத்தவரை எந்த பொது ஊழியராக இருப்பினும் குற்றவியல் வழக்கில் விதிவிலக்கு அளிக்க இயலாது என உத்தரவிட்டார்.
பரிசுப்பொருள் வாங்கக் கூடாது


நீதிபதி தனது உத்தரவில் மேலும் கூறியிருப்பது: காவல் துறையில் பரிசுப் பொருள்கள் என்ற பெயரில் பூங்கொத்துகளைப் பரிமாறிக் கொள்வது அதிக அளவில் நடைபெறுகிறது. இது பரிசுப் பொருள்கள், வரதட்சிணை பெறுவது போன்றதாகும். இது தடுக்கப்பட வேண்டும். காவல்துறையினர் பூங்கொத்துகள், பரிசுப் பொருள்கள், வரதட்சிணை பெறுவதைத் தடுக்கவும், காவல்துறை நடத்தை விதிகளைக் கடுமையாகப் பின்பற்றுவது தொடர்பாகவும் டிஜிபி 6 வாரத்திற்குள் அனைத்து காவல் அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்ப வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.

Post Top Ad