Tuesday, July 2, 2019

எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவப் படிப்பு: தரவரிசைப் பட்டியல் வெளியீடு ஒத்திவைப்பு

எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வு நடைமுறைகள் தாமதமாவதால், திட்டமிட்டபடி தமிழகத்தில் தரவரிசைப் பட்டியலை வெளியிட இயலாத சூழல் இருப்பதாக மருத்துவக் கல்வி இயக்குநரக தேர்வுக் குழு தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளின் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும் நடைமுறை கடந்த 7-ஆம் தேதி தொடங்கி 20-ஆம் தேதி நிறைவடைந்தது.


அதில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு 34,368 விண்ணப்பங்கள், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு 25,388 விண்ணப்பங்கள் என மொத்தம் 59,756 விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டன. இந்த விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு தகுதியான மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் ஜூலை 2-ஆம் தேதி வெளியிடப்படுவதாக இருந்தது. ஆனால், அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வில் ஏற்பட்ட காலதாமதம் காரணமாக தரவரிசைப் பட்டியலை வெளியிட இயலவில்லை என மருத்துவக் கல்வி தேர்வுக் குழு கூடுதல் இயக்குநர் செல்வராஜ் தெரிவித்துள்ளார். அடுத்த ஓரிரு நாள்களில் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். இதையடுத்து, மருத்துவப் படிப்புகளுக்கான முதல் கட்ட கலந்தாய்வு வரும் 4-ஆம் தேதி தொடங்க இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில் கலந்தாய்வு தேதியும் ஒத்திவைக்கப்படும் எனக் கூறப்படுகிறது.

Popular Feed

Recent Story

Featured News