Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Thursday, July 11, 2019

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் நேற்று செய்தியாளர்களிடம் கூறிய புதிய அறிவிப்புகள்!

பாடப்புத்தகங்கள் இல்லாமல் கையடக்க கணினி மூலம் படிக்கும் வசதியை மாணவர்களுக்கு வழங்க இருக்கிறோம் என்றும், முதற்கட்டமாக கையடக்க கணினி 15 லட்சம் மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது என்றும் அமைச்சர் செங்கோட்டையன் பேசினார்.523 ஆசிரியர்களுக்கு புதுமை ஆசிரியர் விருது வழங்கும்விழா சென்னை சேத்துப்பட்டில் உள்ள எம்.சி.சி. மேல்நிலைப்பள்ளியில் நேற்று மாலை நடைபெற்றது.

விழாவுக்கு பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் தலைமை தாங்கினார். இதில் பள்ளிக்கல்வி துறை செயலாளர் பிரதீப் யாதவ், இயக்குனர் கண்ணப்பன் உள்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.நிகழ்ச்சியில் புத்தாக்க நூலை அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்டார். பின்னர், ஆசிரியர்களுக்கு விருதுக்கான பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.



அதைத்தொடர்ந்து அவர் பேசியதாவது:-ஒவ்வொரு மாணவ-மாணவிகளும் சிறந்த கல்வியை பெற வேண்டும் என்ற நோக்கில் இந்த அரசு செயல்பட்டு வருகிறது. மொழிகள் படிப்பை படிப்பதற்கும், தெரிந்து கொள்வதற்கு மட்டும் தான் தேவைப்படுகிறது.மாணவர்களின் திறமையையும், ஆற்றலையும் வளர்த்து கொள்ள ஆசிரியர்களின் ஆற்றலும், சிந்தனையும் தேவை. அது தமிழகத்தில் சரியாக கிடைக்கிறது. மாணவர்கள் தங்களுடைய எதிர்காலத்தை எந்த தயக்கமும் இல்லாமல் அமைத்து கொள்ளலாம்.இந்தியாவில் என்ஜினீயரிங் படித்த ஏறத்தாழ 8 லட்சம் பேர் வேலையில்லாமல் உள்ளனர்.

அதேபோல், தமிழகத்தில் என்ஜினீயரிங் படித்த ஒரு லட்சத்து 20 ஆயிரம் பேர் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். திறன்மேம்பாடு எப்போது உயருகிறதோ? அப்போது தான் தமிழகத்தில் அத்தனை பேருக்கும் வேலைவாய்ப்புக்கான உத்தரவாதம் கிடைக்கும். பின்லாந்தில் கல்வி சார்ந்த திறன்மேம்பாடுகளை கற்றுத்தருகிறார்கள். அதை தொடர்ந்து தான் தமிழகத்தில் இந்த பணிகளை மேற்கொள்ள இருக்கிறோம்.அரசும், ஆசிரியர்களும் நினைத்தால் ஒரு மாணவரை கோபுரத்தில் உட்கார வைக்க முடியும்.



இந்த அரசு 15 லட்சத்து 40 ஆயிரம் மடிக்கணினிகள் ஒரே ஆண்டில் வழங்கி இருக்கிறது. வருகிற செப்டம்பர் மாதம் 15-ந்தேதிக்குள் 9, 10, 11, 12-ம் வகுப்புகள் கணினி மயமாக்கப்பட்டு, இணையதள வசதி கொடுக்கப்படும்.

மாணவ-மாணவிகளின் எதிர்காலத்தை மனதில் கொண்டு, ஒவ்வொரு மாணவருக்கும் கையடக்க கணினி (டேப்) இலவசமாக வழங்குவதற்கு இந்த அரசு திட்டமிட்டு இருக்கிறது.இதன் மூலம் பாடப்புத்தகங்கள் இல்லாமல் ‘கியூ ஆர் கோடு’ மற்றும் ‘பி.டி.எப்’ வடிவில் பதிவிறக்கம் செய்து படிக்கும் வசதி கொண்டு வரப்பட உள்ளது. 15 லட்சம் மாணவர்களுக்கு இந்த வசதி கிடைக்க வழிவகை செய்யப்பட்டு வருகிறது.

6 முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களின் வகுப்பறைகள் வருகிற செப்டம்பர் மாதம் 15-ந்தேதிக்குள்‘ஸ்மார்ட்’ வகுப்புகளாக மாற்றப்படும். நம்முடைய கல்வி முறை இந்தியாவிலேயே பெரிய மாற்றத்தை கொண்டு வரும்.



கல்வி சேனல் மிக விரைவில் முதல்-அமைச்சர் கரங்களால் திறந்து வைக்கப்பட உள்ளது.இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சி முடிந்ததும் அமைச்சர் செங்கோட்டையனிடம், ‘எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 பொதுத்தேர்வுகால அட்டவணை எப்போது வெளியிடப்படும்’ என்று கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், ‘பொதுத்தேர்வு அட்டவணை தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இன்னும் 4 நாட்களில் கால அட்டவணை வெளியிடப்படும்’ என்றார்.

Popular Feed

Recent Story

Featured News