Friday, July 26, 2019

நடுநிலைப் பள்ளிகளிலும் பயோ மெட்ரிக் கருவி பொருத்தும் பணி தொடங்கியது

தமிழகத்தில் அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளைத் தொடர்ந்து 8,179 நடுநிலைப் பள்ளிகளிலும் ஆசிரியர்களுக்கான பயோ மெட்ரிக் கருவிகள் பொருத்தும் பணி தொடங்கியுள்ளது.
தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள், ஆசிரியர்கள் அல்லாத பணியாளர்களின் வருகையை முறைப்படுத்தும் வகையில் அனைத்துப் பள்ளிகளிலும் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட பயோ மெட்ரிக் வருகைப் பதிவு முறை நிகழ் கல்வியாண்டில் அறிமுகப்படுத்தப்பட்டு பயன்பாட்டில் இருந்து வருகிறது. இந்த நிலையில் இரண்டாம் கட்டமாக தற்போது அரசு நடுநிலைப் பள்ளிகளிலும் பயோ மெட்ரிக் கருவிகள் பொருத்தும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.


இதற்காக 413 வட்டாரக் கல்வி அலுவலகங்களுக்கு தூதஞ்சல் (கூரியர்) மூலமாக இந்தக் கருவிகள் அனுப்பப்பட்டு வருகின்றன. இவற்றை சம்பந்தப்பட்ட பள்ளிகளில் நிறுவி கணினி இயக்கத் தெரிந்த பணியாளர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு ஏற்கெனவே பயிற்சி பெற்ற பணியாளர்கள் மூலம் பயிற்சி அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. புதிதாகப் பயிற்சி பெறுபவர்கள் அனைத்துப் பள்ளிகளிலும் இந்தப் பணியை மேற்கொள்ள வேண்டும்.


இந்தப் பணிகள் முடிவடைந்த பின்னர், அது தொடர்பான அறிக்கையை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களிடம் சமர்ப்பிக்க வேண்டும். இதையடுத்து அந்த அறிக்கை பள்ளிக் கல்வித் துறையில் தொழிற்கல்வி இணை இயக்குநரிடம் ஒப்படைக்கப்படும். இந்தப் பணிகளுக்குப் பிறகு 8,179 அரசு நடுநிலைப் பள்ளிகளிலும் ஒரே நாளில் பயோ மெட்ரிக் வருகைப் பதிவு அமல்படுத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Popular Feed

Recent Story

Featured News