Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Wednesday, July 17, 2019

நடிகர் சூர்யா கருத்துக்கு அரசியல் கட்சி தலைவர்கள் ஆதரவு

புதிய கல்விக்கொள்கை தொடர்பாக நடிகர் சூர்யா தெரிவித்த கருத்துக்கு, அரசியல் கட்சி தலைவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

புதிய கல்விக்கொள்கை வரைவு திட்டம் குறித்து நடிகர் சூர்யா கருத்து தெரிவிக்கும்போது, இந்த வரைவுத் திட்டத்தில் ஏராளமான அளவில் பல தேர்வுகளைத் திணிப்பதினால், மாணவர்களின் இடைநிற்றல் அதிகம் ஏற்படக்கூடும் என்பது போன்ற மறுக்கப்பட முடியாத பல கருத்துகளை கூறியதோடு, ‘மக்கள் இதனை ஏற்பதில் விழிப்புடன் இருக்கவேண்டும்’ என்றும் கூறினார்.

ஜனநாயகத்தில் எந்த குடிமகனுக்கும் கருத்துக்கூற உள்ள உரிமையை எந்த அரசும், தனிநபர்களும் தடுக்கவோ, பறிக்கவோ, மிரட்டவோ, அச்சுறுத்தவோ, அதை வைத்து வேறு வழிகளில் பழிவாங்கவோ உரிமை இல்லை. துணிவுள்ள, தெளிவுள்ளவர்கள் சொல்வதைக் கண்டு பாராட்ட முடியாவிட்டாலும், மவுனமாகவாவது இருப்பதுதான் அரசுக்கு நல்லது.



தமிழ்நாட்டு மக்கள் வெறுப்பை ஆட்சியாளர்கள் இப்படி முந்திரிக்கொட்டை தனத்தோடு கேலி செய்வது, தவறாக கருத்துக்கூறி, தங்களது ஆணவ அறியாமையை வெளிச்சம் போட்டுக்காட்டுவது, திராவிட மண்ணின் அரசியலுக்கும், பொதுநலத்திற்கும் உகந்தது அல்ல. சொல்வது யாராக இருந்தாலும், ஆய்வு செய்யும் பக்குவம் வேண்டும். அதுவே நல்ல அரசுக்கு அடையாளமாகும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அன்புமணி ராமதாஸ்

புதிய கல்விக்கொள்கை குறித்து ஆராய பா.ம.க. சார்பில் குழு அமைக்கப்பட்டு உள்ளது. புதிய கல்விக்கொள்கையில் உள்ள சாதக, பாதகங்களை ஆய்வு செய்து அதை மத்திய, மாநில அரசுகளிடம் வழங்கி அழுத்தம் கொடுப்போம். இது ஜனநாயக நாடு. எனவே, மக்களை சார்ந்த கருத்தை யார் (புதிய கல்வி கொள்கை குறித்து நடிகர் சூர்யா கருத்து தெரிவித்ததை குறிப்பிட்டு) வேண்டுமானாலும் சொல்லலாம்.

வேலூர் நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் ஏ.சி.சண்முகம் மிகப்பெரிய வெற்றி பெறுவார். அதற்கு பா.ம.க. உறுதுணையாக இருக்கும். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் எங்கள் கூட்டணி வெற்றி பெறாததற்கு முக்கிய காரணம், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கூறிய பொய்யை மக்கள் நம்பினார்கள், நாங்கள் கூறிய உண்மையை நம்பவில்லை.



இவ்வாறு அவர் கூறினார்.

சீமான்

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

நடிகர் சூர்யா புதிய கல்விக்கொள்கை ஆபத்துகளை சுட்டிக்காட்டி, அதுகுறித்து மக்களிடையே போதிய விழிப்புணர்வு இல்லை என்று தனது ஆதங்கத்தை தெரிவித்துள்ளார். மாணவர்களின் கல்வி உரிமையை புதிய கல்விக்கொள்கை மூலம் பலி கொடுத்துவிடக்கூடாது என்று தனது இனமான கோபத்தை அறச்சீற்றமாக வெளிப்படுத்தினார். அவர் கூறிய கருத்துகள் அனைத்தும் சிந்திக்கத்தக்கது. நியாயமானது. அதனை நாம் தமிழர் கட்சி முழுமையாக ஆதரிக்கிறது. ஆனால் சூர்யாவின் கருத்தை கொச்சைப்படுத்தி மடைமாற்ற முயன்று, புதிய கல்விக்கொள்கை புனிதமான கல்வி கொள்கை போல சித்தரித்து அவருடைய கருத்துக்கு கண்டனம் தெரிவிக்கும் பா.ஜ.க. தலைவர்கள், அ.தி.மு.க. அமைச்சர்கள் அக்கல்வி கொள்கை குறித்து பொதுமேடையில் மக்கள் முன்னிலையில் விவாதிக்க தயாரா? என்பது தான் நாங்கள் எழுப்புகிற கேள்வி.



சூர்யாவின் பேச்சுக்கு உள்நோக்கம் கற்பிப்பதும், அவரை தனிப்பட்ட முறையில் வசைபாடுவதும் ஏற்புடையது அன்று.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Popular Feed

Recent Story

Featured News