Join THAMIZHKADAL WhatsApp Groups
புதுக்கோட்டை மாவட்டத்தில் மிகவும் பின் தங்கிய பகுதி முத்தன்பள்ளம் கிராமம். அடிப்படை வசதிகள் எதுமில்லாமல் இருக்கும் அப்பகுதி கஜாப்புயலால் மேலும் பாதிப்படைந்தது. இங்கு சாலை வசதி, மின்சார வசதி, குடியிருப்பு என எல்லா வசதிகளிலுமே இங்கு வாழும் மக்களுக்கு போதிய கட்டமைப்பு இல்லாத காரணத்தினால் போராட்டமான வாழ்க்கையோடு இவர்கள் இருப்பதை அறிந்த கல்வியாளர்கள் சங்கமம் ஒருங்கிணைப்பாளரும் ஆசிரியருமான சதிஷ்குமார், இங்கு கல்வி பயிலும் மாணாக்கர்கள் வெகுதொலைவு நடைபயணமாக கல்வி பயிலச் செல்வதால், அவர்களுக்கு உதவிட வேண்டும் எனக் கேட்டுக் கொண்டதற்கிணங்க, தமிழ்நாடு அறக்கட்டளை மூலம் முதற்கட்டமாக மாணவர்களுக்கு 10 மிதி வண்டிகள் வழங்கப்பட்டதுடன், அக்குடியிருப்பு பகுதியின் 5 இடங்களில் சூரிய ஒளியில் இயங்கும் தெருவிளக்குகளும் அமைக்கப்பட்டன.
இத்திட்டத்தை செயல்படுத்தும் நிகழ்வில் கலந்துகொண்டு நலத்திட்டங்களை வழங்கிய தமிழ்நாடு அறக்கட்டளையின் தலைமை செயல் அதிகாரி முனைவர்.இளங்கோ இப்பகுதி மக்களுக்கு அரசின் மூலம் வீடுகட்டிக்கொடுக்க தமிழ்நாடு அறக்கட்டளை முன்னெடுக்கும் எனக் குறிப்பிட்டதோடு, இது இதுதொடர்பான முயற்சிகளில் அரசுடன் இணைந்து விரைவில் செயலாற்றுவோம் எனக் குறிப்பிட்டார்.
தினந்தோறும் 5 கிமீ மேல் நடந்துசென்று , கல்வி கற்றுவரும் 10 ம் வகுப்பிற்கு கீழ் பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள மிதிவண்டிகள் மூலம் தினந்தோறும் 10 கிமீ தூரம் கால்வலியுடன் பள்ளி சென்றுவந்த மாணவர்களுக்கு மிகப்பெரிய உதவியாக அமையும் என மாணவர்களின் பெற்றோர்கள் தமிழ்நாடு அறக்கட்டளைக்கும், ஆசிரியர் சதிஷ்குமாருக்கும் நன்றி தெரிவித்தனர்.
இந்நிகழ்வில் தமிழர் மரபுவழி நலம் அறக்கட்டளை தலைவர் கமலி மற்றும் ஊர்ப்பொதுமக்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.