ஒரு குடிமகனாக என்னுடைய கேள்விகளை முன் வைக்கிறேன் என்று நடிகர் சூர்யா ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். கல்வியை பற்றி பேச என்ன தகுதி இருக்கிறது என்று விமர்சனம் எழுந்த நிலையில் இவ்வாறு நடிகர் சூர்யா பதிலடி கொடுத்துள்ளார். சமமான வாய்ப்பு மற்றும் தரமான கல்வி மறுக்கப்பட்ட மாணவர்களின் நிலையை உணர்ந்தவன் நான் என்று சூர்யா தெரிவித்துள்ளார். தேசிய கல்விக்கொள்கை குறித்து ஆசிரியர்கள், கல்வியாளர்கள், தங்கள் கருத்துக்களை தெரிவிக்க நடிகர் சூர்யா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
https://innovate/my/gov/in/new-education-policy-2019/ என்ற இணையதளத்தில் இந்த மாத இறுதிக்குள் கருத்துக்களை தெரிவிக்க வேண்டும் என சூர்யா வேண்டுகோள் விடுத்துள்ளார். அனைத்து தரப்பு கருத்துக்களையும் கேட்டறிந்து தேவையான திருத்தங்களை மத்திய அரசு மேற்கொள்ள நடிகர் சூர்யா வெளியிட்டுள்ள அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார். ஏழை மாணவர்களுக்கு கல்வியே உயர பறப்பதற்கான சிறகு; அது முறிந்து போகாமல் இருக்க அனைவரும் துணை நிற்போம் என்று சூர்யா தெரிவித்தார்.
புதிய தேசிய கல்விக் கொள்கையில், எல்லா விதமான பட்டப் படிப்புகளுக்கும் நுழைவுத்தேர்வை பரிந்துரை செய்திருப்பது அச்சமூட்டுவதாகவும், இந்த நுழைவுத் தேர்வுகள், உயர்கல்வியில் இருந்து கிராமப்புற மாணவர்களை துடைத்து எறிந்துவிடும் என்றும் அவர் கருத்துத் தெரிவித்துள்ளார். நம் நாட்டில் கல்வியானது, ஏழைகளுக்கு ஒன்றாகவும், வசதி படைத்தவர்களுக்கு ஒன்றாகவும் இருக்கிறது என்பதை உணர புள்ளி விவரங்கள் தேவையில்லை. மனசாட்சியே போதுமானது என கூறியுள்ளார்.