வள்ளலார் மற்றும் மூன்று மாபெரும் தமிழறிஞர்கள் பெயரில் புதிய விருதுகள் வழங்கப்படும் என்று தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் க.பாண்டியராஜன் அறிவித்தார். சட்டப்பேரவையில் வியாழக்கிழமை தமிழ் வளர்ச்சித் துறை மானியக் கோரிக்கை மீது நடந்த விவாதங்களுக்குப் பதிலளித்து அவர் வெளியிட்ட அறிவிப்புகள்:-சமரச நெறிகளால் ஆன்மிகத் தொண்டாற்றும் ஒருவருக்கு அருட்பெருஞ்ஜோதி வள்ளலார் பெயரில் ஆண்டுதோறும் விருது அளிக்கப்படும்.
தமிழ் வேர்ச்சொல் ஆய்வு, அகராதி உருவாக்குதல் உள்ளிட்ட பல்வேறு ஆய்வுப் பணிகளில் ஈடுபடும் தமிழறிஞர் ஒருவருக்கு தேவநேயப் பாவாணர் விருதும், காரைக்கால் அம்மையாரின் படைப்பிலக்கிய நெறிகளில் தமிழ்த் தொண்டாற்றி வரும் மகளிர் ஒருவருக்கு காரைக்கால் அம்மையார் பெயரிலும், வீரமாமுனிவர் நெறியில் அவரது படைப்பு நடையில் காவியங்கள், சிற்றிலக்கியங்கள் என்ற வகைகளில் தமிழ்த் தொண்டாற்றி வரும் தமிழறிஞர் ஒருவருக்கு வீரமாமுனிவர் பெயரிலும் விருதுகள் அளிக்கப்படும். ஆய்வுக்கூடம்-அகராதி உருவாக்கம்:
அயல்மொழியினருக்கு எளிதாகவும், விரைவாகவும் தமிழ் கற்பிக்கும் வகையில் வாராணசி இந்துப் பல்கலைக்கழகத்தில் மொழி ஆய்வுக்கூடம் தொடங்கப்படும். அங்கு தமிழ் கற்கும் மாணவர்களுக்கு ஆண்டுதோறும் கல்வி உதவித் தொகை அளிக்கப்படும். செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககத்தின் மூலம் மயங்கொலிச் சொல் அகராதி, மரபுத் தொடர் அகராதி, பை அடக்க அகராதி ஆகியன உருவாக்கப்படும். உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் மூலம் ஆண்டுதோறும் 50 தமிழ் ஆசிரியர்களுக்கு 20 நாள்கள் மொழியியல் நுணுக்கப் பயிற்சி அளிக்கப்படும்.
உலகத் தமிழாராய்ச்சி நிறுவன மாணவர்கள் பிற மொழிகளைக் கற்றுக் கொள்ள சிறப்பு மொழிப் பயிற்சி வழங்கப்படும். ஆட்சிமொழி சட்ட வாரம்: தமிழ் ஆட்சிமொழிச் சட்டமானது கடந்த 1956-ஆம் ஆண்டு டிசம்பர் 27-இல் இயற்றப்பட்டது. இதனை நினைவு கூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 21 முதல் 27-ஆம் தேதி வரை ஆட்சிமொழிச் சட்ட வாரம் அனைத்து மாவட்டங்களிலும் கடைப்பிடிக்கப்படும். தமிழ்நாடு அளவில் மாணவ-மாணவிகளுக்கு குறள் வினாடி-வினா நிகழ்ச்சி ஆண்டுதோறும் நடத்தி பரிசுகள் அளிக்கப்படும். திருக்குறளை உலக நூலாக யுனெஸ்கோ அங்கீகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். தமிழ் இலக்கியம், பிற பாடங்களைத் தமிழ் வழியில் படிக்கும் மாணவர்களுக்குத் தமிழால் முடியும் என்ற வாழ்க்கை வழிகாட்டிப் பயிற்சி மையம் தொடங்கப்படும். திருக்குறள் ஓவியக் காட்சிக் கூடத்தின் வழியாக திருக்குறள் ஓவியப் போட்டிகள் நடத்தப்படும் என்று அமைச்சர் பாண்டியராஜன் அறிவித்தார்.
சங்கப் புலவர்களுக்கு நினைவுத் தூண்கள் சங்கப் புலவர்களை நினைவுகூரும் வகையில் 3 நினைவுத்தூண்கள் அமைக்கப்படும் என அமைச்சர் பாண்டியராஜன் அறிவித்தார். சிவகங்கை மாவட்டம் மகிபாலன்பட்டியில் கணியன் பூங்குன்றனாருக்கும், விழுப்புரம் மாவட்டம் திருக்கோவலூரில் கபிலருக்கு ஒரு தூணும், தூத்துக்குடி மாவட்டம் கொற்கையில் மாறோக்கத்து நம்பலத்தானார், மாறோக்கத்து நப்பசலையார், மாறோக்கத்து முள்ளிநாட்டு நல்லூர்க் காவிதியார் மகன் புல்லங்காடனார், வெறிபாடிய காமக்கண்ணியார், முன்றுறையரையனார் ஆகிய 6 புலவர்களுக்கும் சேர்த்து ஒரு நினைத்தூண் என மொத்தம் 3 நினைவுத் தூண்கள் அமைக்கப்படும். சி.பா.ஆதித்தனார் பெயரில் சிற்றிதழ் பரிசு என்ற புதிய விருது ஆண்டுதோறும் அளிக்கப்படும் என்று பாண்டியராஜன் அறிவித்தார்.