Join THAMIZHKADAL WhatsApp Groups
தலைமையாசிரியர்களின் அயராத பணியால் அரசுப்பள்ளி மாணவர்கள் பிளஸ் 2 தேர்வில் சிறப்பான தேர்ச்சி பெற்றுள்ளனர் என்று பள்ளிக் கல்வித்துறை இணை இயக்குநர் சு.நாகராஜமுருகன் பேசினார்.
தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர் கழகத்தின் ஐம்பெரும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மதுரை சேதுபதி மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற விழாவுக்கு, தலைமையாசிரியர் கழகத்தின் மாநிலத் தலைவர் மு.பொன்முடி தலைமை வகித்தார். மாநில சட்டச் செயலர் கே.அனந்தராமன், மாநில துணைத் தலைவர் கே.நாகசுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில், மாவட்ட கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு பெற்ற தலைமை ஆசிரியர்களுக்கும், 2018-19-இல் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுபெற்ற தலைமையாசிரியர்களுக்கும், பணி நிறைவுபெறும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கும், பிளஸ்2, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் நூறு சதவீதம் தேர்ச்சி பெற்ற அரசு, அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு பாராட்டு விழாவும் நடைபெற்றது. பள்ளிக் கல்வித்துறையின் இணை இயக்குநர் சு.நாகராஜமுருகன் பரிசளித்து பேசியதாவது:
தமிழகத்தில் பள்ளிக் கல்வித்துறையில் அரசுப் பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களின் பங்கு மிக இன்றியமையாதது. இவர்களின் கூட்டு முயற்சியால் தான் பிளஸ் 2 தேர்வில் அரசுப்பள்ளிகள் 94 சதவிகிதம் தேர்ச்சிப் பெற்றுள்ளன. மேலும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களின் சிறப்பான பணியின் மூலம் விலையில்லா மடிக்கணினி, விலையில்லா மிதிவண்டி உள்ளிட்ட அரசு நலத்திட்டங்கள் மாணவர்களை சென்றடைந்துள்ளது.
தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களின் அர்ப்பணிப்பு மிக்க பணியின் மூலம் அரசுப்பள்ளி மாணவர்கள் பெரும் முன்னேற்றத்தை சந்திக்கின்றனர். அரசுப் பள்ளி சிறப்பாக செயல்படுகிறது என்றால் அப்பள்ளியின் தலைமையாசிரியர் சிறப்பாக செயல்படுகிறார் என்றே பொருள் என்றார். விழாவில், மதுரை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஆர்.சுவாமிநாதன், பாரதி பல்நோக்கு மருத்துவமனை தலைவர் ஏ.ஜி.ஆழ்வார் ராமானுஜம், தலைமையாசிரியர் கழக பொருளாளர் செ.சண்முகநாதன், மாவட்ட கல்வி அலுவலர் பங்கஜம் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.
முன்னதாக மாவட்டத் தலைவர் இ.சிவக்குமார் வரவேற்றார். மாவட்ட பொதுச்செயலர் கே.கந்தசாமி நன்றி கூறினார். இதில், ஒரே பள்ளியில் 3 ஆண்டுகள் பணிபுரிந்த தலைமை ஆசிரியர்கள் மட்டுமே பணியிட மாறுதலுக்கு விண்ணப்பிக்க முடியும் என்ற விதியை, முன்பு இருந்தது போல ஓராண்டாக மாற்ற வேண்டும். மேலும், அரசு விதி 101-இன்படி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களின் பணிப்பதிவேடுகள் பராமரிப்பை கீழ் நிலையில் உள்ள மாவட்ட கல்வி அலுவலர்களிடம் ஒப்படைக்காமல், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரிடம் ஒப்படைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.