தில்லியில் 2020-இல் நடைபெறும் 17 வயதுக்குள்பட்டோருக்கான பிபா உலகக் கோப்பை மகளிர் கால்பந்துப் போட்டியில் பங்கேற்க நாமக்கல் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவி பி.மாரியம்மாள் தேர்வாகியுள்ளார்.
சேலம் மாவட்டத்துக்குள்பட்ட சங்ககிரியைச் சேர்ந்த விசைத்தறித் தொழிலாளர்களான பாலமுருகன்- காந்திமதி தம்பதியின் மகள் மாரியம்மாள்(17). தற்போது, நாமக்கல் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்2 படித்து வருகிறார்.
கால்பந்துப் போட்டியில் ஆர்வம் கொண்ட தனது சகோதரரைப் பார்த்து, 8-ஆம் வகுப்பு படிக்கும்போதே மாரியம்மாளும் தீவிர பயிற்சியை மேற்கொண்டு வந்தார்.
இதற்காக, நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் இயங்கும் விடுதியில் சேர்க்கை பெற்றார். மாவட்ட, மாநில அளவிலான போட்டிகளிலும், பின்னர் தேசிய அளவிலான இளையோர் மகளிர் கால்பந்துப் போட்டியில் தமிழக அணி சார்பில் பங்கேற்று பரிசுகளைப் பெற்றார்.
தெலங்கானா, மணிப்பூர், ஒடிஸா, மகாராஷ்டிரம், கோவா உள்ளிட்ட மாநிலங்களில் நடைபெற்ற போட்டிகளில் பங்கேற்று விளையாடினார்.
இதில், 2018-ஆம் ஆண்டு கோவாவில் நடைபெற்ற போட்டியில் 12 கோல்கள் அடித்து அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார்.
ஏற்கெனவே, பஞ்சாப் மாநிலம் பட்டியலா, ஒடிஸா, கட்டாக் போன்ற இடங்களில், கடந்த பிப்ரவரி மாதம் இவர் சிறப்புப் பயிற்சி பெற்று வந்தார்.
அதனடிப்படையில், 2020- ஜூலை மாதம் தில்லியில் நடைபெறும் 17 வயதுக்குள்பட்டோருக்கான அணிக்கு, மே மாதம் நடைபெற்ற வீராங்கனைகள் தேர்வின்போது இந்திய அளவில் 18 பேர் தேர்வாயினர். அதில், தமிழகம் சார்பில் மாரியம்மாள் மட்டுமே தேர்வானார்.
உலகக் கோப்பையில் சாதிக்க விருப்பம்
எனது சாதனைக்கு பயிற்சியாளர் கோகிலாவே முக்கிய காரணம்.
கடந்த இரண்டு மாதமாக பயிற்சி, போட்டியில் பங்கேற்று வருவதால், பள்ளிக்குச் செல்ல முடியவில்லை. விடுதியில் இருந்தபடியே படிக்க வாய்ப்பை வழங்கினால், போட்டிக்குத் தேர்வாவதிலும், படிப்பதிலும் பிரச்னை இருக்காது.
பயிற்சி மேற்கொள்ள போதுமான வசதியில்லாதது ஒரு குறையாக இருக்கிறது. கால்பந்துக்கான விளையாட்டு மைதானம், நீச்சல் குளம், உடற்பயிற்சி நிலையம் உள்ளிட்டவை இருந்தால் பயிற்சி மேற்கொள்ள நல்ல வாய்ப்பாக இருக்கும். மேலும், 18 பேர் தேர்வானதில், தமிழகத்தில் இருந்து நான் மட்டும் தேர்வாகியுள்ளேன். இதனால் பிற மொழி வீராங்கனைகளோடு போட்டி ரீதியாக தொடர்பு கொள்வதில் பிரச்னை இருக்கிறது. இவற்றையெல்லாம் கடந்து உலகக் கோப்பையில் சாதிக்க வேண்டும் என்பது தான் எனது விருப்பம் என்றார்.