Friday, July 26, 2019

வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தில் மானியம் பெற விண்ணப்பிக்கலாம்

வேலையற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் மானியம் பெற விண்ணப்பிக்கலாம் என திருவள்ளூர் கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: வேலையற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் 2010-11ம் நிதியாண்டில் தமிழக அரசால் அறிவிக்கப்பட்டு மாவட்ட தொழில் மைய அலுவலகத்தினால் கடந்த 9 ஆண்டுகளாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.


திருவள்ளுர் மாவட்டத்திற்கு 2019-20ம் ஆண்டிற்கு இத்திட்டத்தின் கீழ் பயன் பெற 200 பயனாளிகளுக்கு ₹1.20 கோடி மானியத்தொகை வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் உற்பத்தி தொழில்களுக்கு அதிகபட்சம் ₹10 லட்சமும், சேவை தொழில்களுக்கு ₹3 லட்சமும், வியாபாரத்திற்கு ₹1 லட்சமும் பெறலாம். இத்திட்டத்தின் கீழ் கடன் உதவி பெறுபவர்களின் கல்வி தகுதி 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருத்தல் வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ₹1.50,000க்கு மிகைப்படாமல் இருத்தல் வேண்டும். பொதுப்பிரிவினர் 18 முதல் 35க்குள்ளும், சிறப்பு பிரிவினர் (பெண்கள், மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினர், திருநங்கையர்கள், சிறுபான்மையினர், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பட்டியலின வகுப்பினர்) 45 வயதுக்குள்ளும் இருத்தல் வேண்டும்.


இத்திட்டத்தின் கீழ் திட்ட மதிப்பில் 25 சதவீத மானியம் அதிகபட்சமாக ₹1,25,000 வரை வழங்கப்படும். இத்திட்டத்தின் கீழ் தகுதியான உற்பத்தி சேவை மற்றும் விற்பனை தொழில்கள் செய்ய விண்ணப்பிக்க, திருவள்ளுர் மாவட்டத்தில் வசிக்கும் ஆர்வமுள்ள தொழில் முனைவோர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம். மேலும் விபரங்களுக்கு, காக்களுர் தொழிற்பேட்டையில் உள்ள மாவட்ட தொழில் மைய பொது மேலாளரை, நேரிலோ அல்லது 044-27666787, 044-27663796, 9842480424 என்ற தொலைபேசி மூலமாக தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Popular Feed

Recent Story

Featured News