Wednesday, July 3, 2019

மருத்துவப் படிப்புகளில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான இடஒதுக்கீடு: முழுமையாக வழங்கக் கோரி மனு

இளங்கலை மற்றும் முதுகலை மருத்துவப் படிப்புகளில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 27 சதவீத இடஒதுக்கீட்டை அகில இந்திய ஒதுக்கீட்டில் அனைத்து கல்லூரிகளிலும் முழுமையாக வழங்கக் கோரி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் ஜி.ஆர்.ரவீந்திரநாத் தாக்கல் செய்த பொதுநல மனுவில், நாடு முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் இளங்கலை மருத்துவப் படிப்புகளான எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். படிப்புகளுக்கு 15 சதவீதமும், முதுகலை மருத்துவப் படிப்புகளான எம்.டி., எம்.எஸ். மற்றும் மருத்துவ பட்டய மேற்படிப்புகளுக்கு 50 சதவீதமும் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு ஒதுக்கப்படுகிறது.

இந்த இடஒதுக்கீட்டில் தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு 15 சதவீதமும், பழங்குடியின வகுப்பினருக்கு 7.5 சதவீதமும், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதவீதமும் வழங்கப்பட வேண்டும்.
இந்த நிலையில், மத்திய அரசு கடந்த 2007-ஆம் ஆண்டு கொண்டு வந்த சட்டப்பிரிவு 5-இன் படி, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இந்த இடஒதுக்கீடு, மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள கல்வி நிறுவனங்கள் மற்றும் மத்திய அரசின் உதவி பெறும் கல்வி நிலையங்களில் மட்டுமே அமல்படுத்தப்படுகிறது. இந்திய அரசியலமைப்புச் சட்டம் கொடுத்துள்ள இடஒதுக்கீடு உத்தரவாத முறையில் பாகுபாடு காட்டுவது சட்டவிரோதமானது.


இடஒதுக்கீடு என்பது அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் பொதுவானது. இந்த பாகுபாட்டின் காரணமாக, கடந்த 2008-ஆம் ஆண்டு முதல் இந்தியா முழுவதும் உள்ள மத்திய அரசு கல்வி நிறுவனங்கள் அல்லாத பிற மருத்துவக் கல்லூரிகளில் அகில இந்திய ஒதுக்கீட்டில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு கிடைக்க வேண்டிய இடங்கள் பறிபோய் வருகிறது.
எனவே, அந்தந்த மாநிலங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கும் இளங்கலை மற்றும் முதுகலை மருத்துவப் படிப்புகளுக்கான இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான 27 சதவீதத்தை அனைத்து கல்லூரிகளிலும் பாகுபாடு இல்லாமல் முழுமையாக வழங்க வேண்டும்.


அதே போல், இந்த இடஒதுக்கீடு மத்திய அரசு கல்வி நிறுவனங்களுக்கு மட்டுமே பொருந்தும் என இந்திய மருத்துவ கவுன்சிலின் தகவல் குறிப்பேடு அறிவிப்பாணையை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Popular Feed

Recent Story

Featured News