தமிழகத்தில் 15 லட்சம் மாணவர்களுக்கு மலேசிய நிறுவனத்தின் உதவியுடன் கையடக்க கணினிகள் (டேப்லெட்) வழங்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தெரிவித்தார்.
கல்வி முயற்சிகளுக்கான முதலீடு இல்லா கண்டுபிடிப்புகளை வழங்கிய 523 ஆசிரியர்களுக்கு புதுமை ஆசிரியர் விருதை வழங்கினார்.
ஸ்ரீ அரபிந்தோ சங்கம் சார்பில் நாடு தழுவிய கல்வி மாற்றத் திட்டமான ரூபாந்தர் திட்டத்தின் ஒரு பகுதியாக கல்வி முயற்சிகளுக்கான முதலீடு இல்லாத கண்டுபிடிப்புகள்' என்ற திட்டம் கடந்த 2015-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
இந்தத் திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த கல்வித் திட்டம் ஆகியவை இணைந்து கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் தமிழகத்தின் அனைத்து மாவட்ட ஆசிரியர்களுக்கும் கற்பித்தலில் முதலீடு இல்லா புத்தாக்கங்கள் குறித்த அரை நாள் பயிற்சி வழங்கப்பட்டது.
இந்தப் பயிற்சியில் தமிழகம் முழுவதும் ஒரு லட்சத்து 50 ஆயிரம் ஆசிரியர்கள் ஆர்வமுடன் பங்கேற்று அவர்களின் புதுமையான கற்பித்தல் முறைகளை சமர்ப்பித்தனர்.
அதிலிருந்து சிறந்த புத்தாக்கமாக 23 ஆசிரியர்களின் 17 புத்தாக்கங்கள் (புதிய முயற்சிகள்) புத்தகமாக அச்சிடப்பட்டு தில்லி ஐஐடி-யில் வெளியிடப்பட்டது.
அதே விழாவில், அந்த 23 ஆசிரியர்களுக்கு தேசிய அளவில் புத்தாக்க விருது வழங்கப்பட்டது.
அதே நேரத்தில் பயிற்சியின் போது ஆசிரியர்கள் சமர்ப்பித்த முதலீடு இல்லா புதுமையான கற்பித்தல் முறைகளில் சிறந்த கற்பித்தல் முறைகளை சமர்ப்பித்த 523 ஆசிரியர்களுக்கு கற்பித்தலில் புதுமை ஆசிரியர்கள்' விருது வழங்கும் விழா சென்னையில் புதன்கிழமை நடைபெற்றது.
இந்த விழாவில் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் கலந்து கொண்டு விருதுகளை வழங்கினார்.
இதையடுத்து அவர் செய்தியாளர்களிடம் கூறியது: எவ்வளவு கடினமான விஷயங்களையும் தங்களின் புதிய முயற்சிகள் மூலம் மாணவர்களுக்கு எளிதாகப் புரிய வைக்கும் திறமை ஆசிரியர்களுக்கு உள்ளது.
அத்தகைய ஆசிரியர்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளை வழங்க பள்ளிக் கல்வித் துறை திட்டமிட்டுள்ளது. எதிர்காலத்தில் புத்தகமே இல்லாமல் டிஜிட்டல் முறையில் மாணவர்கள் கற்கும் சூழல் ஏற்படும்.
இதுதொடர்பான திட்டத்தைச் செயல்படுத்த முதல்வரிடம் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
விரைவில் பிளஸ் 2 தேர்வு அட்டவணை: தமிழகத்தில் 15 லட்சம் மாணவர்களுக்கு மலேசிய நிறுவனத்தின் உதவியுடன் கையடக்க கணினிகள் வழங்கப்படும்.
பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு கால அட்டவணை விரைவில் வெளியிடப்படும் என்றார். இந்த விழாவில் பள்ளிக் கல்வித் துறைச் செயலர் பிரதீப் யாதவ், இயக்குநர் எஸ்.கண்ணப்பன், இணை இயக்குநர் நாகராஜ முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்