Wednesday, July 3, 2019

பள்ளி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்படவில்லையா?

பள்ளியில் தற்போது பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு படித்து வரும் மாணவர்களுக்கே முக்கியத்துவம் கொடுத்து மடிக்கணினி வழங்கி வருகிறோம் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் விளக்கமளித்தார்.
சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை பள்ளிக் கல்வித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் திமுக உறுப்பினர் சுரேஷ்ராஜன் பேசும்போது, மடிக்கணினி வழங்காததால் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.


அதனால், அவர்களுக்கு உடனடியாக மடிக்கணினி வழங்க வேண்டும் என்றார். பின்னர், திமுக உறுப்பினர் எழிலரசன் பேசும்போது, இதே கோரிக்கையை வலியுறுத்தினார். அதற்கு, அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் விளக்கமளித்ததாவது:
பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பில் தற்போது படித்து வரும் மாணவர்களுக்குத்தான் முக்கியத்துவம் கொடுத்து மடிக்கணினி வழங்கி வருகிறோம். நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்த காரணத்தால் 2 ஆண்டுகள் மடிக்கணினி வழங்கப்படவில்லை.
இப்போது, அளித்து வருகிறோம். ஏற்கெனவே பிளஸ் 1, பிளஸ் 2 படித்துச் சென்ற மாணவர்களும் மடிக்கணினி கேட்டு வருகின்றனர்.

அவர்களுக்குத் தர மாட்டோம் என்று அரசு கூறவில்லை. முதலில் இப்போது படிப்பவர்களுக்கு அளித்துவிட்டு, பிறகு ஏற்கெனவே படித்தவர்களுக்குத் தர உள்ளோம் என்றார்.
அதன் பிறகு திமுக உறுப்பினர் தங்கம் தென்னரசு எழுந்து, படித்துக் கொண்டிருக்கும் மாணவர்களுக்குத் தராததால்தான் கேட்கின்றனர் என்றார். அதற்கு, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, நீதிமன்றத்தில் வழக்கு இருந்ததால்தான் மாணவர்களுக்குக் கொடுக்க முடியாத சூழல் இருந்தது என்று அமைச்சர் தெளிவாகக் கூறியுள்ளார் என்றார்.

Popular Feed

Recent Story

Featured News