Saturday, August 10, 2019

கள்ளர் சீரமைப்பு பள்ளி ஆசிரியர்களுக்கு இடமாறுதல் வழங்க வழிகாட்டு நெறிமுறைகள்: அரசாணை வெளியீடு

கள்ளர் சீரமைப்புப் பள்ளி ஆசிரியர்களுக்கு இடமாறுதல் வழங்க தமிழக அரசின் சார்பில் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது: கள்ளர் சீரமைப்பு தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள், கள்ளர் சீரமைப்பு விடுதிகளில் பணியாற்றும் போதகக் காப்பாளர் ஆகியோருக்கு பொது மாறுதல் வழங்கும் போது பின்பற்ற வேண்டிய நெறிமுறைகள் குறித்து மிகப் பிற்படுத்தப்பட்டோர், சீர் மரபினர் நல இயக்குநர் அரசு ஒப்புதலுக்காக அனுப்பி இருந்தார். இதையடுத்து மேற்கண்ட ஆசிரியர்கள், காப்பாளர்களுக்கு பொதுமாறுதல் வழங்கும்போது கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது.

பணி ஓய்வு, பதவி உயர்வு, பணி துறப்பு, இறப்பு, பணிமாற்றம் புதியதாக தோற்றுவிக்கப்பட்ட பணியிடங்கள் உள்ளிட்ட அனைத்து காலிப் பணியிடங்களும் பொது மாறுதல் கவுன்சலிங் மூலம் நிரப்ப வேண்டும். ஆசிரியர்கள், காப்பாளர்கள் பணியிடங்களை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த காலிப் பணியிடங்களின் பட்டியல் 1.6.2019 அன்றைய நிலையில் தயாரிக்க வேண்டும்.
கள்ளர் பள்ளிகளில் கவுன்சலிங் நடக்கும் போது பணி நிரவல், ஆசிரியர்கள் மாறுதல்கள் அதனையொட்டி பதவி உயர்வு என்ற முறையில் நடத்தப்படல் வேண்டும்.
காலிப் பணியிடங்களை கவுன்சலிங்கில் காட்டும்போது ஆசிரியரின்றி உபரியாக உள்ள காலிப் பணியிடங்களை மிகவும் பிற்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல இயக்குநரின் தொகுப்புக்கு கொண்டு செல்வதோடு, அப்பணியிடங்களை கவுன்சலிங்கில் காண்பிக்க கூடாது. மேலும், அந்தப் பணியிடங்களுக்கு மாறுதல் வழங்குதல் கூடாது.

பொது மாறுதல்கள் கேட்போரின் விண்ணப்பங்கள் முறையாக பெறப்பட்டு தொகுத்து அவற்றுக்கு வரிசை எண் கொடுத்து முறையாக பதிவேட்டில் பதிய வேண்டும். முறையான விண்ணப்பம் இல்லாமல் எந்த மாறுதல் கோரிக்கைகளும் பரிசீலிக்க கூடாது. மேற்கண்ட முக்கிய வழிகாட்டு நெறிமுறைகள் உள்ளிட்ட 20 வழிகாட்டு நெறிமுறைகள் அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

Popular Feed

Recent Story

Featured News