வரலாற்றை தேடி தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள அரிட்டாபட்டி மலைக்கு அரசு பள்ளி மாணவர்கள் 6 கி.மீ. தூரம் நடைப்பயணமாக வந்தனர். மேலூர் அருகில் உள்ள தெற்குதெரு அரசு மேல்நிலைப் பள்ளி 9ம் வகுப்பு மாணவ, மாணவிகள் 69 பேர் நமது பாரம்பரிய கலாச்சாரம் மற்றும் பண்டைய காலத்தை பற்றி அறிந்து கொள்வதாக கல்வி பயணம் மேற்கொள்ள முடிவு செய்தனர். இதற்காக தெற்குதெருவில் இருந்து 6 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள அரிட்டாபட்டியை தேர்வு செய்தனர்.
இந்த தூரத்தை நடந்தே சென்று பார்ப்பது என முடிவு செய்த ஆசிரியர்கள் ஜெயபத்மா, சர்மிளா பானு தங்கள் மாணவர்களை அழைத்து கொண்டு 6 கிலோ மீட்டர் தூரம் நடந்து அரிட்டாபட்டியை அடைந்தனர்.
அங்குள்ள சமண படுகைகள், பிராமி கல்வெட்டுகள், வட்டெழுத்துக்கள், குடவறை கோயில் ஆகியவற்றை பார்வையிட்டனர். மேலும் அரிட்டாபட்டி மலை மீது மலை ஏற்றம் செய்தனர். ஏழுமலை பாதுகாப்பு சங்க செயலாளர் ரவிச்சந்திரன் இவர்களுக்கு அப்பகுதியில் அரிதாக காணப்படும் பறவையினங்கள் மற்றும் பூச்சிகள் பற்றி எடுத்து கூறினார். குடவறை சிவன் கோயில் பூசாரி சிவலிங்கம் மாணவ, மாணவிகளுக்கு மலையில் அமைந்துள்ள பிராமி மற்றும் சமண படுகைகள் குறித்து விளக்கி கூறினார்.
No comments:
Post a Comment