Wednesday, August 28, 2019

சாரண இயக்க அமைப்புகளுக்கு பள்ளி வகுப்பறைகள் ஒதுக்கீடு: அமைச்சர் செங்கோட்டையன்


இடம் தேவைப்படும் சாரண இயக்க அமைப்புகளுக்கு காலியாக உள்ள பள்ளிகளின் வகுப்பறைகள் ஒதுக்கீடு செய்து தரப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
தமிழ்நாடு பாரத சாரண சாரணியர் இயக்கத்தின் 10-ஆவது மாநில மாநாட்டின் தொடக்க விழா, மீனம்பாக்கத்தில் உள்ள ஏ.எம்.ஜெயின் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதனை பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தொடங்கி வைத்து பேசியது:
தமிழகத்தில் 4 லட்சத்து 20 ஆயிரம் பேர் சாரண இயக்கத்தில் உறுப்பினர்களாக உள்ளனர். இதில் சேர விரும்புவோருக்கு சீருடை, ஷூ ஆகியவற்றை வழங்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்.


தமிழகத்தில் மொத்தம் 131 சாரண இயக்க அமைப்புகள் உள்ளன. இந்த அமைப்புகளுக்கான இடவசதி இல்லை என கூறினார்கள்.
எனவே அந்தந்த இடங்களில் இருக்கும் அரசுப் பள்ளிகளின் காலியான வகுப்பறைகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். சுற்றுச்சூழலை பேணிக் காக்க வேண்டிய சூழலில் நாம் இருக்கிறோம். இதன் ஒரு பகுதியாக மரக்கன்றுகள் நடும் மாணவர்களுக்கு 3 மரத்துக்கு 2 மதிப்பெண்கள் வழங்கும் திட்டத்தை அரசு பரிசீலனை செய்து வருகிறது. அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் இருந்து வெளியேறும் மாணவர்களில் 40 சதவீதமானோர் மட்டுமே உயர்கல்வி பயில்கின்றனர். மீதமுள்ள 60% மாணவ மாணவிகளின் நலனுக்காக அவர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்க திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளை வழங்க அரசு திட்டங்களை வகுத்து வருகிறது என்றார்.
நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், உடற்கல்விக்காக சிறப்பாசிரியர் நியமனம் செய்வதற்கு தேர்வு நடத்தப்பட்டுள்ளது. இன்னும் 15 நாள்களில் இதற்கான கலந்தாய்வு நடத்தப்பட்டு சிறப்பாசிரியர்கள் நியமிக்கப்படுவர் என்றார்.


மீனம்பாக்கத்தில் நடைபெறும் இந்த மாநாடு, வரும் 31-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க தமிழகம் முழுவதிலும் இருந்து 2,500-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பதிவு செய்துள்ளனர். நிகழ்ச்சி தொடக்கத்தில் சாரண இயக்க மாணவர்களின் சாகச நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியில், அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், பென்ஜமின், பாரத சாரணியர் இயக்கத்தின் மாநில ஆணையர் ஹரீஷ் எல்.மேத்தா, தமிழ்நாடு சாரணர்-சாரணியர் இயக்கத்தின் மாநிலத் தலைவர் பி.மணி, மாநில முதன்மை ஆணையர் இளங்கோவன், முன்னாள் அமைச்சர் சிவபதி, சென்னை மண்டல அஞ்சல் துறைத் தலைவர் ஆனந்த் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News