பிளஸ் 2 முடிக்கும் மாணவர்கள் &'நீட்&' என்ற அகில இந்திய நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற்றால் தான் மருத்துவ படிப்பில் சேர முடியும். இதனால் அரசு பள்ளி மாணவர்களுக்கு இரண்டு ஆண்டுகளாக இலவசமாக நீட் பயிற்சி வகுப்புகளை அரசு நடத்தி வருகிறது. இந்த பயிற்சி ஆண்டுதோறும் டிசம்பரில் துவக்கப்பட்டு ஏப்ரல் வரை வழங்கப்படும். பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிந்த பின் தனியார் கல்லுாரி வளாகங்களில் உணவு உறைவிட வசதியுடன் இந்த பயிற்சிதரப்படுகிறது.நடப்பு கல்வி ஆண்டில் நீட் தேர்வில் 9000க்கும் மேற்பட்ட அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர்.
இதையடுத்து அடுத்த ஆண்டு நடக்க உள்ள நீட் தேர்வுக்கான முன்னேற்பாடுகளை பள்ளி கல்வி இயக்குனரகம் துவக்கியுள்ளது. அதேநேரத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் நீட் பயிற்சி வகுப்பில் பங்கேற்க விரும்பினால் அவர்களுக்கு குறைந்தபட்ச ஆர்வம் இருப்பதை பரிசோதிக்கும் வகையில் தகுதி தேர்வு நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.ஒவ்வொரு மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் வழியாக இந்த தகுதி தேர்வுகளை நடத்தி அதில் தேர்ச்சி பெறுபவர்களில் ஆர்வமுள்ள மாணவர்களை நீட் பயிற்சி வகுப்பில் சேர்க்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமைகளில் இதுகுறித்த குறுந்தேர்வுகள் நடத்தப்படும். இதற்கான வினாக்கள் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு பள்ளி கல்வி இயக்குனரகத்தால் வாரந்தோறும் வழங்கப்படும் என பள்ளி கல்வி இயக்குனரகத்தின் சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.