Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Tuesday, August 20, 2019

யோகா-இயற்கை மருத்துவப் படிப்புகள்: ஓரிரு நாள்களில் தரவரிசைப் பட்டியல்

யோகா மற்றும் இயற்கை மருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் அடுத்த ஓரிரு நாள்களில் வெளியிடப்படும் என்று இந்திய மருத்துவத் துறை தெரிவித்துள்ளது.
அதற்கு அடுத்த சில நாள்களில் கலந்தாய்வு மூலம் மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு, தனியார் யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரிகளில் பி.என்.ஒய்.எஸ். எனப்படும் இளநிலை யோகா மற்றும் இயற்கை மருத்துவப் படிப்புகளுக்கு 600-க்கும் மேற்பட்ட இடங்கள் உள்ளன. குறிப்பாக, அரசுக் கல்லூரியில் 60 இடங்களும், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மாநில அரசு ஒதுக்கீட்டுக்கு 385 இடங்களும், நிர்வாக ஒதுக்கீட்டுக்கு 192 இடங்களும் உள்ளன.


இந்நிலையில், அந்தப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நிகழாண்டு பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் நடைபெற உள்ளது. அதற்கான விண்ணப்ப விநியோகம், கடந்த மாதம் நடைபெற்றது. www.tnhealth.org , www.tnmedicalselection.org ஆகிய இணையதளங்களின் வாயிலாகவும், யோகா - இயற்கை மருத்துவக் கல்லூரிகளில் நேரடியாகவும் இரண்டாயிரத்துக்கும் அதிகமானோர் விண்ணப்பங்களைப் பெற்றனர்.


அவற்றில் 1,688 விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், அந்த விண்ணப்பங்களைப் பரிசீலனை செய்யும் நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாக இந்திய மருத்துவத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். அடுத்த ஓரிரு நாள்களில் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும் என்றும், அதைத் தொடர்ந்து கலந்தாய்வு நடைபெறும் என்றும் அவர்கள் கூறினர்.