Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Tuesday, August 27, 2019

சித்தா, ஆயுர்வேத படிப்புகளுக்கு விண்ணப்பம்: ஆன்லைனில் நாளை தொடக்கம்

சித்தா, ஆயுர்வேதம் உள்ளிட்ட இந்திய மருத்துவப் படிப்புகளுக்கு வரும் புதன்கிழமை (ஆக. 28) முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான அறிவிப்பை இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை திங்கள்கிழமை வெளியிட்டது.
நிகழாண்டில் அப்படிப்புகளுக்கு விண்ணப்பிக்க நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருப்பது கட்டாயம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. பாரம்பரிய மருத்துவப் படிப்புகளைப் பொருத்தவரை, அரும்பாக்கம் அறிஞர் அண்ணா அரசு பாரம்பரிய மருத்துவமனை வளாகத்தில் உள்ள சித்த மருத்துவக் கல்லூரியில் 60 இடங்களும், யுனானி மருத்துவக் கல்லூரியில் 60 இடங்களும், யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரியில் 60 இடங்களும் உள்ளன.

அதேபோன்று, திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை சித்த மருத்துவக் கல்லூரியில் 100 இடங்கள், மதுரை மாவட்டம், திருமங்கலத்தில் உள்ள ஹோமியோபதி மருத்துவக் கல்லூரியில் 50 இடங்கள், நாகர்கோவில், கோட்டாறில் உள்ள ஆயுர்வேத மருத்துவக் கல்லூரியில் 60 இடங்கள் என 6 அரசு கல்லூரிகளில் மொத்தம் 390 இடங்கள் உள்ளன. இதேபோல 27 தனியார் கல்லூரிகளில் மாநில அரசு ஒதுக்கீட்டுக்கு சுமார் 1,200 இடங்கள் உள்ளன.
எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட அலோபதி மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நீட் தேர்வு மூலம் நடைபெறுகிறது. இந்நிலையில் சித்தா, ஹோமியோபதி, யுனானி, ஆயுர்வேதம் உள்ளிட்ட பாரம்பரிய மருத்துவப் படிப்புகளுக்கும் நீட் தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம் என மத்திய அரசு அறிவித்தது.


இருப்பினும், அதிலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கக் கோரி மத்திய அரசுக்கு கடிதம் எழுதியிருப்பதாக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியிருந்தார். ஆனால், அதனை மத்திய அரசு ஏற்கவில்லை எனத் தெரிகிறது. இதையடுத்து, நிகழாண்டில் நீட் தரவரிசை அடிப்படையிலேயே அப்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை வெளியிட்ட அறிவிப்பு:
பிஎஸ்எம்எஸ் (சித்தா), பிஏஎம்எஸ் (ஆயுர்வேதம்), பியூஎம்எஸ் (யுனானி), பிஎச்எம்எஸ் (ஹோமியோபதி) ஆகிய படிப்புகளுக்கான விண்ணப்ப விநியோகம் வரும் 28-ஆம் தேதி தொடங்க உள்ளது.

இம்முறை விண்ணப்பங்களை www.tnhealth.org என்ற சுகாதாரத்துறை இணையதளம் வாயிலாக மாணவர்கள் பதிவிறக்கம் செய்யலாம். பிளஸ்-2 வகுப்பில் அறிவியல் மற்றும் ஆங்கிலப் பாடத்தை தேர்வு செய்து படித்தவர்கள், நீட் தேர்வில் தகுதி பெற்றவர்கள் இந்தப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம். 13-ஆம் தேதி வரை விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்யலாம். அன்றைய தினம் மாலை 5 மணிக்குள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அரும்பாக்கம் அண்ணா இயற்கை மருத்துவம், ஹோமியோபதி துறைக்கு அனுப்ப வேண்டும் என்று அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News