தமிழக அரசின் சார்பில் தொடங்கப்பட்டுள்ள கல்வித் தொலைக்காட்சியை மாணவர்கள் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கல்வித் தொலைக்காட்சி ஒளிபரப்பு தொடக்க விழா, சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி கலந்து கொண்டு ஒளிபரப்பைத் தொடக்கி வைத்துப் பேசியது:
கல்லாதவர்களே தமிழகத்தில் இருக்கக் கூடாது என்பதே அரசின் குறிக்கோளாகும். இதைக் கருத்தில் கொண்டு கல்வித்துறையின் வளர்ச்சிக்கு அதிமுக தலைமையிலான அரசு மேற்கொண்ட முயற்சிகளால் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது.
பள்ளிக் கல்வித் துறையின் திட்டங்களை மக்களிடம் எடுத்துச் செல்லவும், பொதுத் தேர்வுகள், கல்வி உதவித் தொகை தேர்வுகள், நுழைவுத் தேர்வுகள் தொடர்பாக மாணவர்களுக்கு ஆலோசனைகள் வழங்கவும் கல்வித் தொலைக்காட்சி சேனல் தற்போது தொடங்கப்பட்டுள்ளது.
அரசு கேபிளில் 200-ஆவது சேனல்: இதற்கான நிகழ்ச்சிகளை ஒளிபரப்பு செய்ய நவீன கேமராக்கள், தொழில்நுட்பக் கருவிகள், ஆளில்லா பறக்கும் கேமரா (ஹெலி கேமிரா) போன்ற பல்வேறு தொழில்நுட்பக் கருவிகள் வாங்குவதற்கென ரூ.1.35 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்றுள்ளன. இந்த சேனல் அரசு கேபிளில் 200-ஆவது சேனலாக ஒளிபரப்பாகும்.
வணிக நோக்கில் செயல்படும் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுடன் போட்டி போடும் வகையில் நிகழ்ச்சிகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.
எல்.கே.ஜி. முதல் பிளஸ் 2 வகுப்பு வரை படிக்கும் மாணாக்கர்களுக்கு பயன்படும் வகையில் போட்டித் தேர்வுக்கான பயிற்சிகள், படைப்பாற்றலை மேம்படுத்தும் நிகழ்ச்சிகள், மாணவர்களின் சந்தேகங்களுக்குத் தீர்வு சொல்லும் நிபுணர்களின் பதில்கள், பள்ளிக் கல்வித் துறையின் அறிவிப்புகள், புதுமையான முறையில் கற்பிக்கும் ஆசிரியர்களின் நேர்காணல், அரசுப் பள்ளி மாணவர்களின் கண்டுபிடிப்புகள் என பல்வேறு நிகழ்ச்சிகள் 24 மணி நேரமும் இடம் பெறும்.
எனவே, கல்வித் தொலைக்காட்சி சேனலை மாணவர்கள் பார்த்து அதை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.
உலக சாதனை: கல்வித் தொலைக்காட்சி சேனல் பிற மாநிலங்கள் மற்றும் உலக நாடுகளுக்கு முன்னோடித் திட்டமாக உருவெடுத்துள்ளது. இதன் காரணமாக யுனிக் வேர்ல்டு ரெகார்டு நிறுவனத்தின் தலைமை தீர்ப்பாளர் ரகுமான், உலக சாதனைக்கான ஆவணங்கள் அனைத்தையும் சரிபார்த்து பின்னர் உலக சாதனையாக அங்கீகரித்து அதற்கான சான்றிதழை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமியிடம் வழங்கினார்.
முன்னதாக, கல்வி வளர்ச்சிக்கு தமிழக அரசு செயல்படுத்தி வரும் திட்டங்கள் குறித்து சட்டப் பேரவைத் தலைவர் ப.தனபால், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், தலைமைச் செயலர் க.சண்முகம் உள்ளிட்டோர் பேசினர்.
இதில் தமிழக அமைச்சர்கள், சட்டப்பேரவை மற்றும் மக்களவை உறுப்பினர்கள், கல்வித் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
அரசுப் பள்ளிகளில் ஒளிபரப்பு: கல்வித் தொலைக்காட்சி சேனல் தொடக்க விழா தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் திங்கள்கிழமை பிற்பகல் 3 முதல் 4 மணி வரை ஒளிபரப்பப்பட்டது. இதைத் தொடர்ந்து தினமும் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளை மாணவர்கள் கண்டுகளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment