Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Tuesday, August 20, 2019

சித்தா, ஆயுர்வேத படிப்புகள் இம்முறை ஆன்லைனில் விண்ணப்பம்

சித்தா, ஆயுர்வேதம், யுனானி, ஹோமியோபதி உள்ளிட்ட பாரம்பரிய மருத்துவப் படிப்புகளுக்கு நிகழாண்டில் ஆன்லைன் முறையில் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பாரம்பரிய மருத்துவப் படிப்புகளைப் பொருத்தவரை, அரும்பாக்கம் அறிஞர் அண்ணா அரசு பாரம்பரிய மருத்துவமனை வளாகத்தில் உள்ள சித்த மருத்துவக் கல்லூரியில் 60 இடங்களும், யுனானி மருத்துவக் கல்லூரியில் 60 இடங்களும், யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரியில் 60 இடங்களும் உள்ளன.



அதேபோன்று, திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை சித்த மருத்துவக் கல்லூரியில் 100 இடங்கள், மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் உள்ள ஹோமியோபதி மருத்துவக் கல்லூரியில் 50 இடங்கள், நாகர்கோவில், கோட்டாறில் உள்ள ஆயுர்வேத மருத்துவக் கல்லூரியில் 60 இடங்கள் என 6 அரசு கல்லூரிகளில் மொத்தம் 390 இடங்கள் உள்ளன. இதேபோல 27 தனியார் கல்லூரிகளில் மாநில அரசு ஒதுக்கீட்டுக்கு சுமார் 1,200 இடங்கள் உள்ளன.

எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட அலோபதி மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நீட் தேர்வு மூலம் நடைபெறுகிறது.

இந்நிலையில் சித்தா, ஹோமியோபதி, யுனானி, ஆயுர்வேதம் உள்ளிட்ட பாரம்பரிய மருத்துவப் படிப்புகளுக்கும் நீட் கட்டாயம் என மத்திய அரசு அறிவித்தது.

இதனால் அப்படிப்புகளுக்கு நீட் தர வரிசை அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறவிருக்கிறது.



அதற்கான விண்ணப்ப விநியோகம் இந்த வார இறுதிக்குள் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இம்முறை விண்ணப்பங்களை www.tnhealth.org, www.tnmedicalselection.net என்ற இணையதளங்கள் வாயிலாக விநியோகிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, பாரம்பரிய மருத்துவப் படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள், அந்த இணையதளங்களில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.