Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Thursday, August 1, 2019

போர் வீரர்கள் சூடிக் கொண்ட பூக்கள் - Flowers and War

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups
சங்க காலத்தில் தமிழ்நாட்டில் வாழ்ந்த போர் வீரர்கள், போருக்குச் செல்லும் போது ஒரு குறிப்பிட்ட பூவைத் தலையில் சூடிச் செல்வார்கள்.

வெட்சிப் பூ
பகைவரைப் போருக்கு அழைத்து அதில் வெற்றி பெற விரும்பும் ஒரு நாட்டின் வீரர்கள், முதலாவதாக அப்பகை நாட்டில் உள்ள பசுக் கூட்டங்களைக் கவர்ந்து வருவார்கள். இந்த போர்முறைக்கு "வெட்சித்திணை" என்று பெயர். அப்போது அவ்வீரர்கள் வெட்சிப் பூவைத் தலையில் சூடி போருக்குச் செல்வார்கள்.

கரந்தைப் பூ
வெட்சி வீரர்கள் கவர்ந்து சென்ற பசுக்கூட்டங்களை மீட்டுவர நிகழ்த்தப்படும் போர், "கரந்தைத்திணை" எனப்படும். அவ்வாறு பசுக்கூட்டங்களை மீட்டு வர, போர் நிகழ்த்தச் செல்லும் வீரர்கள் கரந்தைப் பூவைச் சூடிச் செல்வார்கள்.

வஞ்சிப் பூ

பகை மன்னனின் மண்ணினைக் கைப்பற்றக் கருதி நிகழ்த்தப்படும் போர், "வஞ்சித்திணை" எனப்படும். இப்போர் நிகழ்த்தச் செல்லும் வீரர்கள் வஞ்சிப் பூவினைச் சூடிச் செல்வார்கள்.


காஞ்சிப் பூ
வஞ்சித்திணைக்கு நேர் எதிரான போர்ச்செயல் காஞ்சித்திணை எனப்படும். வஞ்சி பூ அணிந்து வரும் வீரர்கள், தன் நாட்டைக் கைப்பற்ற வருதலை அறிந்த மன்னன், அவர்களுக்கு எதிராகப் போரிட்டுத் தன் நாட்டினைக் காத்துக் கொள்வது "காஞ்சித்திணை" எனப்படும். இப் போர் மேற்கொள்ளும் வீரர்கள் காஞ்சிப் பூச் சூடிச் செல்வார்கள்.

நொச்சிப் பூ
இதுவும் பகை வேந்தனின் தாக்குதலை எதிர்த்து நிற்பதுதான். அரண்மனையின் பெரிய பாதுகாப்பு அரண் ஆகிய மதிலைக் (கோட்டைச் சுவர்) கைப்பற்றி, பகைவர்கள் உள்ளே வந்து விடாதபடி அம் மதிலைப் பாதுகாக்கும் போர்முறை நொச்சித்திணை எனப்படும். மதில்காக்கும் வீரர்கள் நொச்சி பூவினைச் சூடிச் செல்வார்கள்.

உழிஞைப் பூ
நொச்சித்திணை வீரர்கள் தன் தங்கள் நாட்டின் மதிலினைக் காத்து நிற்பார்கள். அவர்களை எதிர்த்துப் போரிட்டு, மதிலினைக் கைப்பற்றும் போர் முறை "உழிஞைத்திணை" எனப்படும். இப் போருக்குச் செல்லும் வீரர்கள் உழிஞை பூவினைச் சூடிச் செல்வார்கள்.

தும்பைப் பூ
ஒருவருக்கொருவர் பகை கொண்ட இரு நாட்டின் வீரர்கள் , இறுதியாக போர்க்களத்தில் எதிர் எதிராக நின்று சண்டை செய்வார்கள். இப்போர் "வீரம்" என்பதை மையமாக வைத்து நடைபெறும். இதுவே இறுதிக் கட்ட போர் ஆகும். இப்போர் முறை "தும்பைத்திணை" எனப்படும். இப்போர் நிகழும்போது வீரர்கள் தும்பைப் பூவைச் சூடுவர்.

வாகைப் பூ

போரில் வெற்றி பெற்ற மன்னனையும், வீரர்களையும் புகழ்வது "வாகைத்திணை". போரில் வெற்றி பெற்ற மன்னனும் அவரது வீரர்களும், வாகைப் பூச்சூடி மகிழ்வார்கள்.

மேலே கூறப்பட்டுள்ள தகவல்கள் கற்பனைக் கதை அல்ல. புறநானூற்றில் உள்ள ஒரு பாடல் மூலம் இந்த தகவல்களை நாம் அறியமுடிகிறது. இதோ அப்பாடல்.

வெட்சி நிரை கவர்தல் ; மீட்டல் கரந்தையாம்
வட்கார் மேல் செல்வது வஞ்சி ; உட்காது
எதிர்ஊன்றல் காஞ்சி ; எயில்காத்தல் நொச்சி
அது வளைத்தல் ஆகும் உழிஞை - அதிரப்
பொருவது தும்பையாம்;போர்க்களத்து மிக்கோர்
செரு வென்றது வாகையாம்.


( நிரை = பசுக்களின் கூட்டம், வட்கார் = பகைவர் , உட்காது = அஞ்சாது, எயில் = கோட்டைச் சுவர், பொருவது = போரிடுவது, செரு = போர்)

1. நிரை கவர்தல் - வெட்சி
2. நிரை மீட்டல் - கரந்தை
3. மண் கவர்தல் - வஞ்சி
4. மண் காத்தல் - காஞ்சி
5. மதில் காத்தல் - நொச்சி
6. மதில் வளைத்தல் - உழிஞை
7. போரிடல் - தும்பை
8. போரில் வெற்றி பெறுதல் - வாகை

பகைவரது பசுக்கூட்டங்களைக் கவர்தல்,
அவர்கள் அதை மீட்டல் ;
மண்ணாசை கொண்டு போரிட வருதல்,
வரவிடாமல் தடுத்தல் ;
மதிலை வளைத்துப் போரிடல்
மதிலுக்குள் இருந்து தடுத்தல் ;
இறுதியாக எதிர் எதிரே நின்று போரிடல்
அதில் ஒருவர் வெற்றி பெறுதல்

Post Comments

Popular Feed

Recent Story

Featured News

Back To Top