நம் முன்னோர்கள் காலத்தை நொடி, நாழிகை, நாள், கிழமை, திங்கள், ஆண்டு, ஊழி என வானியல் முறைப்படி வரையறை செய்துள்ளனர். 60 நாழிகையை ஒரு நாளாகவும், ஒரு நாளை வைகறை, காலை, நண்பகல், எற்பாடு, மாலை, யாமம் என 6 சிறு பொழுதுகளாகவும், ஓராண்டை இளவேனில், முதுவேனில், கார், கூதிர், முன்பனி, பின்பனி என 6 பெரும் பொழுதுகளாகவும் பிரித்துள்ளனர்.
தென் அமெரிக்காவில் உயர்ந்த நாகரீகத்துடன் அறிவுஜீவிகளாக வாழ்ந்து மறைந்த 'மாயன்' இனத்தவர் கட்டிடக்கலை, வான சாஸ்திரம், ஜோதிடம், அமானுஷ்யம், கணித சூத்திரம் போன்ற கலைகளில் தேர்ச்சி பெற்றிருந்தனர். அவர்கள் வைத்திருந்த காலண்டர் கிமு 313ல் தொடங்கியது. சூரிய மண்டலத்திற்கு 7 நாட்கள் என்பது பூமியை பொறுத்தவரை 25 ஆயிரத்து 625 ஆண்டுகளாம். இதனை மாயன் காலண்டர் 5 கால கட்டங்களாக பிரிக்கிறது. ஒவ்வொரு கால கட்டமும் 5,125 ஆண்டுகளை கொண்டிருக்கிறது. இதன்படி 4 கால கட்டங்கள் முடிவடைந்து இப்போது 5வது காலகட்டம் நடந்து கொண்டிருக்கிறது. பூமியில் எதிர்பாராமல் ஏற்பட்டு கொண்டிருக்கும் புயல், திடீர் வறட்சி, அதீத வெப்பம் மற்றும் குளிர், நிலநடுக்கம், எரிமலை வெடிப்பு, அண்டார்டிக்கா உருகல் போன்றவை பற்றியும் அவர்கள் கால அட்டவணையில் குறிப்பிட்டுள்ளனர்.
ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மெசப்படோமியாவில் (ஈராக்) நாகரிகத்தில் சிறந்து விளங்கிய சுமேரியர்கள் வானாராய்ச்சியில் ஆர்வம் காட்டி காலத்தை கணிக்கும் அறிவு பெற்று முதன் முதலில் நாட்காட்டி உருவாக்கினர். எகிப்தியரும் இதுபோல ஒரு நாட்காட்டி தயாரித்தார்கள். கி.மு. 7ம் நூற்றாண்டில் இருந்து ரோமானியர் பயன்படுத்திய நாட்காட்டியில் மார்ச் முதல் டிசம்பர் வரை 10 மாதங்களே இருந்தன. ஆனால் குறைபாடு காரணமாய் பருவகால மாற்றங்களோடு அது ஒத்துப்போகவில்லை. ரோமானிய மாமன்னர் ஜூலியஸ் சீசர் கேட்டுக்கொண்டபடி, எகிப்திய விண்ணியல் வல்லுநர் சொசிஜினஸ் என்பவர் கி.மு. 46ல் புதிய காலண்டரை படைத்தார். இதில் 12 மாதங்கள், சில மாதங்களுக்கு 30, சிலவற்றுக்கு 31 நாட்கள், 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரு நாளை சேர்த்து கொள்ளவேண்டும் என்பது அவரது ஏற்பாடு. பதிமூன்றாம் கிரிகோரி என்ற போப்பாண்டவர் 1582ம் ஆண்டில் இரு சீர்திருத்தங்கள் செய்தார்.
அதன்படி ஆண்டுக்கு 355 நாட்கள் எனவும், இரு பூஜ்ஜியங்களில் முடியும் ஆண்டெல்லாம் லீப் ஆண்டாய் இருந்ததை, பூஜ்ஜியங்களுக்கு முன்னால் உள்ள எண், 4ல் மீதியின்றி வகுபட்டால்தான் லீப் ஆண்டு எனவும் திருத்தம் கொண்டு வந்தார். இந்த கிரிகோரியன் காலண்டர்தான் தற்போது உலகம் முழுவதும் பயன்படுத்தப்படுகிறது. இந்த ஆங்கில காலண்டரில் ஒரு குறிப்பிட்ட பழைய ஆண்டின் காலண்டர் பின்னர் வரும் ஆண்டோடு ஒத்துப்போகும். சுமார் 120 ஆண்டுகளுக்கு முந்தைய காலண்டர் புதிய ஆண்டுக்கு சரியாக இருக்கும். அதுபோல நடப்பு 2019 ஆண்டின் காலண்டரோடு, 124 ஆண்டுகளுக்கு முந்தைய 1895ம் ஆண்டைய காலண்டர் சரியாக ஒத்துப்போகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த காலண்டர் தற்போது வாட்ஸ்-அப்பில் வைரலாக பரவி வருகிறது.