Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Sunday, September 29, 2019

பான் எண்ணுடன் ஆதார் இணைப்புக்கான அவகாசம் டிச.31 வரை நீட்டிப்பு


நிரந்தர வருமான வரி கணக்கு எண்ணுடன் (பான் எண்) ஆதார் எண்ணை இணைப்பதற்கான அவகாசம் டிசம்பர் 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
பான்-ஆதார் இணைப்புக்கான அவகாசத்தை மத்திய நேரடி வரிகள் வாரியம் (சிபிடிடி) நீட்டிப்பது, இது ஏழாவது முறையாகும். ஏற்கெனவே இந்த அவகாசத்தை கடந்த மார்ச் 31-ஆம் தேதியில் இருந்து செப்டம்பர் 30-ஆம் தேதி வரை 6 மாதங்களுக்கு மத்திய அரசு நீட்டித்திருந்தது. இந்த அவகாசம் தற்போது மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.



இந்திய குடிமக்கள் ஒவ்வொருவருக்கும் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (யுஐடிஏஐ), ஆதார் எண் என்ற 12 இலக்க அடையாள எண்ணை வழங்குகிறது. வருமான வரி செலுத்தும் தனி நபருக்கும், நிறுவனத்துக்கும் நிரந்தர வருமான வரி கணக்கு எண் (பான் எண்) என்ற 10 இலக்கத்தில் எண்ணும், எழுத்தும் கொண்ட அடையாள எண்ணை வருமான வரித் துறை வழங்குகிறது.



வருமான வரி எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று மத்திய நேரடி வரிகள் வாரியம் கடந்த 2017-ஆம் ஆண்டு ஜூலை 1-ஆம் தேதி அறிவிக்கை வெளியிட்டிருந்தது. அதன்பிறகு ஆதார்-பான் இணைப்புக்கான அவகாசம் பல முறை நீட்டிக்கப்பட்டது. இதனிடையே, குடிமக்களுக்கு ஆதார் அட்டை வழங்குவதற்கு எதிராகத் தொடுக்கப்பட்ட வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், ஆதார் திட்டம் சட்டப்படி செல்லும் என்று கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தீர்ப்பளித்தது. மேலும், வருமான வரி செலுத்துவதற்கு ஆதார் எண் கட்டாயம் என்றும் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.


இதனிடையே, வருமான வரி கணக்கைத் தாக்கல் செய்யும்போது, பான் எண்ணுக்குப் பதிலாக ஆதார் எண்ணைக் குறிப்பிட்டால் போதுமானது மத்திய பொது பட்ஜெட்டில் கடந்த ஜூலை மாதம் 5-ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. இருப்பினும், மத்திய நேரடி வரிகள் வாரியம் இந்த மாதத் தொடக்கத்தில் அறிவிப்பை ஒன்றை வெளியிட்டது. அதில், ஆதார் எண் மட்டுமே தெரிவிக்கப்படும் வருமான வரி கணக்குகளுக்கு தாமாக பான் எண் உருவாக்கப்பட்டு விடும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

Popular Feed

Recent Story

Featured News