அம்பிகை ஒருத்திதான். ஆனால் நவராத்திரியின் ஒவ்வொரு நாளும் அவளை நாம் ஒவ்வொரு வடிவமாக மனதி பிரார்த்தனை செய்து அந்த வடிவத்துக்கு ஏற்ப மலர், நைவேத்தியம் வைத்து வணங்க வேண்டும்.
அந்த வகையில் முதல் நாள் மதுகைடப வதத்துக்கு மூலகாரணமான மகேஸ்வரி தேவியை அபயவரஹஸ்தத்தோடு, புத்தகம், அட்ச மாலையுடன் குமாரி வடிவமாக அலங்கரித்து மனதில் தியானம் செய்து வணங்க வேண்டும்.
திரிசூலமும், பிறை சந்திரன் மற்றும் அரவமும் தரித்து ரிஷப வாகனத்தில் எழுந்தருளியிருப்பவள் மகேஸ்வரி. சிவபெருமானுடைய பத்தினி மகேஸ்வரி. அளவிடமுடியாத பெரும் சரீரம் கொண்டவள். மகேஸ்வரியை மஹீதி என்றும் அழைப்பார்கள். மகேஸ்வரி சகல சௌபாக்கியத்தையும் அளிக்கக்கூடியவர். தென்நாட்டில் முதல் நாள் வணங்கப்படும் தேவியின் அம்சம் வனதுர்க்கை ஆகும்.
வனதுர்க்கை என்றால் வனத்தில் குடிகொண்டவள் என்பது பொருளல்ல. இந்த பிரபஞ்சத்தில் பிறந்த அனைத்து உயிர்களும் வாழ்க்கை என்னும் வனத்தில் அகப்பட்டு வெளிவரமுடியாமல் தவிக்கின்றவர் ஆவார். எனவே, தேவியின் திருவுருவமான வனதுர்க்கையை நினைத்து வழிபடுவதால் வனத்தில் உள்ள அடர்ந்த இருளைப் போக்கி நம்மை செழுமைப்படுத்துகிறார்.
அன்னைக்கு சாற்ற வேண்டிய மாலை : மல்லிகைப்பூ மாலை
அன்னைக்கு சாற்ற வேண்டிய இலை : வில்வம்
அன்னைக்கு சாற்ற வேண்டிய வஸ்திர நிறம் : சிவப்பு
அன்னையின் அலங்காரத்திற்கு பயன்படுத்த வேண்டிய மலர்கள் : சிவப்புநிற பூக்கள்
கோலம் : அரிசி மாவால் புள்ளி கோலம் போட வேண்டும்.
நெய்வேத்தியம் : வெண்பொங்கல்
குமாரி வயது : 2 வயது
குமாரி பூஜையால் உண்டாகும் பலன்கள் : இன்னல்கள் நீங்கும்.
பாட வேண்டிய ராகம் : தோடி
பயன்படுத்த வேண்டிய இசைக்கருவி : மிருதங்கம்
குமாரிக்கு தரவேண்டிய பிரசாதம் : சுண்டல்
பலன் : வறுமை நீங்கும், வாழ்நாள் பெருகும். மகிழ்ச்சியுடன் நீண்ட ஆயுள் வாழ்வார்கள்.