Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Saturday, September 28, 2019

சுதந்திர இந்தியாவில் முதல் முறையாக நடைபெறும் உலகத் தமிழிசை மாநாடு!


சென்னை, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் சார்பில் மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தில் 2019 திசம்பர் 14,15 ஆகிய நாட்களில் 100 ஆண்டுகளுக்குப் பிறகு முதன் முறையாக உலகத் தமிழிசை மாநாடு நடைபெற உள்ளது.இம்மாநாட்டிற்கு ஆராய்ச்சிக் கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன.
தமிழிசை இயக்கத் தந்தை ஆபிரகாம் பண்டிதர் அவர்கள் 1919ஆம் ஆண்டு வரை ஆறு தமிழிசை மாநாடுகளை நடத்தியுள்ளார். அதன்பிறகு 100 ஆண்டுகளாகத் தமிழிசை மாநாடு நடைபெறவில்லை. தமிழிசைக்கு வளம் சேர்த்த அவரின் நூற்றாண்டான இவ்வாண்டில் தமிழிசை மாநாட்டை வெகுசிறப்பாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இம்மாநாட்டிற்கு ஐம்பதுக்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து தமிழிசைக் கலைஞர்களும் அறிஞர்களும் மாணவர்களும் கலந்துகொள்ள உள்ளனர் என தமிழ் வளர்ச்சி மற்றும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் முனைவர் கோ. விசயராகவன் அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.


இம்மாநாட்டின் ஒருங்கிணைப்புச் செயலர் முனைவர் கு. சிதம்பரம், உதவிப் பேராசிரியர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் அவர்கள் கூறுகையில், தமிழ் மொழி எப்படி பல்வேறு காலக்கட்டங்களில் அந்நிய மொழிகளின் தாக்கத்திற்கு உள்ளானதோ அதேபோல தமிழிசையும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது; அந்நிலை இன்றும் நீடித்துவருகின்றது. அந்நிலையிலிருந்து தமிழிசையினை மீட்டுருவாக்கம் செய்யும் நோக்கிலும் தமிழிசையின் மேன்மையினையும் இனிமையினையும் உலகெங்கும் பரப்பும் நோக்கிலும் இம்மாநாடு அமையும். இம்மாநாட்டில் தமிழிசையின் தொன்மையினை வெளிப்படுத்தும் விதமாக ஆய்வரங்கம், தமிழிசைக் கருவிகளைக் காட்சிப்படுத்துதல், தமிழிசைப் பாடல்கள், தமிழிசை நடனம், போன்ற நிகழ்வுகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.


மேலும், இம்மாநாட்டிற்குத் தமிழிசையின் தோற்றம், வளச்சி, தமிழிசை மருத்துவம், தமிழிசை நாடகம், தமிழ்சைக் கல்வி, தமிழிசைக் கல்வெட்டுகள் , தமிழிசைத் தூண்கள், தமிழிசை சார்ந்த அரசு திட்டங்கள் குறித்த ஆராய்ச்சிக் கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன. கட்டுரையின் ஆய்வு சுருக்கத்தினை அக்டோபர் 15க்குள் 9500 106269 என்ற புலன எண்ணிற்கு அனுப்பலாம். முழுக் கட்டுரையினை நவம்பர் 16க்குள் isaimanadu2019@gmail.com என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். மேலும் விபரங்களை WWW. isaitamiljournal.com என்ற இணையத்தளம் வழியாக அறியலாம் என அவர் கூரினார்.