லாஸ் ஏஞ்சலஸ்:செவ்வாய் கிரகத்துக்கு, 'நாசா' அனுப்பும் விண்கலத்தில், பெயர்களைப் பொறிப்பதற்காக ஒரு கோடிக்கும் மேற்பட்டோர் பதிவு செய்துள்ளனர். பதிவுக்கு, இன்று கடைசிநாள்.செவ்வாய் கிரகத்துக்கு, 'மார்ஸ் 2020 ரோவர்' விண்கலத்தை, அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி மையமான 'நாசா', அடுத்த ஆண்டு ஜூலையில் செலுத்த உள்ளது. 2021 பிப்ரவரியில், இது, செவ்வாயில் தரையிறங்கும். இந்த விண்கலத்தில், தங்கள் பெயர்களை இலவசமாக பொறிப்பதற்கான வாய்ப்பை, 'நாசா' வழங்கியிருந்தது. இதற்கு இன்று கடைசி நாள். https://go.nasa.gov/Mars2020Pass என்ற இணையதளத்தில், பெயர்களைப் பதிந்து, தங்கள் பெயருடன் கூடிய அடையாள பயணச்சீட்டை பெற முடியும்.
நேற்று பகல் 1:00 மணி நிலவரப்படி, ஒரு கோடியே 58 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர், தங்கள் பெயர்களைப் பதிவிட்டுள்ளனர்.அதிகபட்சமாக, துருக்கியில் 25 லட்சம் பேரும், அதை தொடர்ந்து, இந்தியாவில் 15.7 லட்சம் பேர், அமெரிக்காவில், 12.5 லட்சம் பேர், இதற்காக பெயர் பதிவு செய்துள்ளனர்.கலிபோர்னியா பாஸ்டோனாவில் உள்ள, 'நாசா'வின் ஜெட் புரொபல்சன் ஆய்வுக்கூடத்தில் உள்ள நுண்கருவிகள் ஆய்வகம், எலக்ட்ரான் கதிர்வீச்சை பயன்படுத்தி, பதிவு செய்யப்பட்ட பெயர்களை, சிலிக்கான் சிப்பில் பொறிக்கும். இந்த சிப்கள் கண்ணாடியால் மூடப்பட்டு, ரோவரில் பயணிக்கும்.