Join THAMIZHKADAL WhatsApp Groups
கருப்பு பணத்தை மீட்கும் மற்றொரு முயற்சியாக, கணக்கில் காட்டப்படாத தங்கத்துக்கு 30 சதவீதம் வரிவிதிக்கும் அதிரடி திட்டத்தை கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
நாட்டில் உள்ள கருப்பு பணத்தை மீட்க, மத்திய அரசு கடந்த 2014ம் ஆண்டு முதல் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்காகத்தான் பணமதிப்பிழப்பு நடவடிக்கையே கொண்டு வரப்பட்டது. மேலும், கணக்கில் காட்டப்படாமல் பதுக்கி வைத்திருக்கும் கருப்பு பணத்தை வெளியே கொண்டு வருவதற்கான சலுகை திட்டத்தையும் கடந்த 2016ல் மத்திய அரசு கொண்டு வந்தது. இதன்படி, கருப்பு பணத்தை தானாக முன்வந்து தெரிவித்தால். 30 சதவீத வரி, 7.5 சதவீத கூடுதல் வரி, 7.5 சதவீதம் அபராதம் என மொத்தம் 45 சதவீதம் வரியை செலுத்தி விட்டு, மீதத் தொகையை வெள்ளையாக தங்கள் கணக்கில் சேர்த்துக் கொள்ளலாம்.
* தனிநபர் ஒருவர் எந்த ரசீதும் இல்லாமலும், கணக்கில் காட்டாமலும் வைத்திருக்கும் தங்கத்தை அரசிடம் தெரிவித்து வரி செலுத்த வேண்டும்.
* இதற்கான வரி எவ்வளவு என்பதை அரசு இன்னும் முடிவு செய்யவில்லை. ஆனால், 30 சதவீதம் முதல் 33 சதவீதம் வரை வரி விதிக்கப்படலாம் எனத் தெரிகிறது.
* இந்த திட்டம் மூலம் தங்கம் வடிவில் இருக்கும் கருப்பு பணம் கணக்கில் வரும்.
* கணக்கில் காட்டப்படாத பணத்தை அரசிடம் தெரிவிக்க மத்திய அரசு ஏற்கனவே கொண்டு வந்த பிரதமரின், ‘கரீப் கல்யாண் யோஜனா திட்டம்’ ஒரு குறிப்பிட்ட அளவில்தான் வெற்றி பெற்றது. அதனால், தங்கம் வடிவில் இருக்கும் கருப்பு பணத்தை மீட்க இந்த புதிய திட்டத்தை அரசு கொண்டு வருகிறது.
* இது நல்ல திட்டமாக இருந்தாலும், இதை அமல்படுத்துவதில் சிக்கல் ஏற்படும் என தெரிகிறது.
* மக்கள் பலர் ஆண்டாண்டு காலமாக தங்க நகைகளை சிறிது சிறிதாக வாங்கி சேமித்து, தங்கள் வாரிசுகளுக்கு கொடுத்து வருகின்றனர். இதற்கான ரசீது பலரிடம் இருக்க வாய்ப்பில்லை. எனவே, ரசீது இல்லாத தங்கத்துக்கு வரி செலுத்த வேண்டும் என அறிவித்தால், அது மக்களிடையே கடும் எதிர்ப்பை ஏற்படுத்தும்.
* பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகும், கணக்கில் காட்டப்படாத பணத்தை அரசிடம் தெரிவித்த பின்பும், பலருக்கு அவர்களின் டெபாசிட் செய்த பணம் எப்படி வந்தது என விளக்கம் கேட்டு வருமான வரித்துறையிடம் இருந்து லட்சக்கணக்கான எஸ்எம்எஸ்.்கள் வந்தன.
* அதனால், அரசின் இந்த திட்டமும் வெற்றி பெறுமா என்பது சந்தேகமே.
* கணக்கில் காட்டப்படாத பணத்தை தெரிவிக்க குறிப்பிட்ட கால அளவு நிர்ணயம் செய்தது போல், தங்கத்தை தெரிவிக்கவும் கெடு நிர்ணயிக்கப்படும் எனத் தெரிகிறது.
* கருப்பு பணத்தை மீட்பதில் மோடி அரசு தோல்வியடைந்து விட்டதாக கடந்த மக்களவை தேர்தலில் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின.