Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Sunday, October 13, 2019

இன்றைய ஆசிரியர் எப்படி இருக்க வேண்டும்?- மாணவி மானசியின் உரை ( தமிழ் இந்து)

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups

பன்னிரண்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கும் 17 வயது மானசி, வாசிப்பின் மீது பேரார்வம்கொண்டவர். எட்டு வயதில் வாசிக்கத் தொடங்கிய இவர், இலக்கியக் கூட்டங்கள், கதைசொல்லும் நிகழ்வு, வாசிப்புப் பட்டறைகள், மொழிபெயர்ப்பு முகாம்கள் என வாசிப்பு சார்ந்த செயல்பாடுகளில் தொடர்ந்து பங்கெடுத்துவருபவர். இந்த இளம் வயதில் அவரால் ரஷ்ய, லத்தீன் அமெரிக்க, ஆப்பிரிக்க, ஜப்பானிய இலக்கியங்கள் குறித்து தீவிரமாக உரையாட முடியும். ஆங்கிலக் கவிதைகளின் நுட்பங்களைப் பேச முடியும்.

மானசியின் தமிழ் இலக்கிய வாசிப்பும் பரந்துவிரிந்தது. காந்திகிராம் பல்கலைக்கழகத்தில் நிகழ்ந்த ‘படைப்பாளிகளைச் சந்திப்போம்’ நிகழ்வில் அவர் நிகழ்த்திய உரையிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளை இங்கே தருகிறோம். வாசிப்பு தன்னை எப்படிச் செதுக்கியது, தான் விரும்பும் கல்வி எப்படிப்பட்டது, ஆசிரியரிடமிருந்து எதிர்பார்ப்பது என்னென்ன என்று பேசுகிறார் மானசி.
எழுத்துக்கூட்டிப் படிக்கத் தொடங்கிய காலம்தொட்டு வாசிப்பின் மீது மிகப் பெரும் ஆர்வம் எனக்குள் இருந்தது. புத்தகங்களுடன் திரிவதைப் பெரிதும் நேசித்தேன். என் வாசிப்புப் பழக்கம்தான் என் விரல் கோத்து, தலைகோதி, வாழ்வின் எல்லாப் பக்கங்களையும் எனக்குப் படிக்கச் சொல்லிக்கொடுத்தது. மானுட இரைச்சல் சுமந்த நகரக் காற்று நம்முள் மறக்கடித்த பல உணர்வுகளை இலக்கியம் மட்டுமே மீட்டெடுக்க முடியும். ‘இலக்கியம் என்ன செய்துவிடும்?’ என்ற மிக நீண்ட கேள்விக்குத் தீவிரமாக வாசிக்கத் தொடங்கிய பின்பே என்னால் பதில் தீட்ட முடிந்தது.


மன்ட்டோ போல் ஒரு அசலான எழுத்தாளன் கற்றுக்கொடுக்கும் உண்மை நம் வாழ்வையே மாற்றியமைக்கிறது. தன் சொந்த வீட்டைக் கலவரத்தின்போது மக்கள் சூரையாடுவற்காகத் திறந்துவிடும் மனிதனின் குற்றவுணர்ச்சி கலந்த உண்மையை, மன்ட்டோ போல ஒரு கலவர பூமியை ரத்தமும் சதையுமாக எதிர்கொண்ட ஒருவன்தானே அறிமுகப்படுத்த முடியும்?
டால்ஸ்டாயின் அறமும், தஸ்தயேவ்ஸ்கியின் உளப்பகுப்பாய்வும் ஒருசேரப் பெற்றவர் செகாவ். பன்னிரண்டு வயதில் செகாவின் ஒரு சிறுகதை எனக்குள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ‘அட் கிறிஸ்மஸ் டைம்’ என்ற சிறுகதையில் மகளை வெகு தொலைவுக்குத் திருமணம் செய்துகொடுத்த வயதான தம்பதியர், மகளிடமிருந்து நான்கு வருடங்களில் ஒரு கடிதமும் வராததால் எழுதப் படிக்கத் தெரியாத இருவரும் ஊரில் படித்த ஒருவர் மூலமாகத் தங்கள் மகளுக்கான கடிதத்தை எழுதத் தொடங்குகிறார்கள். அந்தக் கடிதம் இப்படித் தொடங்குகிறது: ‘அன்புள்ள மரியா, நாங்கள் இருவரும் இன்னும் உயிரோடுதான் இருக்கிறோம்.’ இதுபோன்று நுட்பங்களை வெளிச்சமிட்டுக் காட்டுவது இலக்கியம் மட்டும்தான்.


இலக்கியத்தை ஸ்பரிசிக்காமலும் புத்தகங்களின் மணம் அறியாமலும் நாம் கடத்தும் நாட்களின் பொருள் தெரியாமல் வாழும் வாழ்க்கை பரிதாபத்துக்குரியதுதான்.
இதனால்தான் ஜே.கிருஷ்ணமூர்த்தி நம்மை உணர்ச்சிகள் அற்றுப்போன இளைஞர்கள் என்கிறார். நாம் வியப்பை இழந்தவர்கள். ‘ஒரு பூ மலர்வதில் இருக்கும் மர்மத்தையும் அற்புதத்தையும் நம்மால் உணர முடிந்தால் அதுவே நம் மொத்த வாழ்க்கையையும் மாற்றிவிடும் மிகப் பெரிய ஆசான்’ என்கிறார் புத்தர்.
நம் கண்கள் வியப்பதற்கு மாறாகப் பல விஷயங்களில் அலட்சியப் பார்வையை மட்டுமே உதறிச்செல்கிறோம். இந்த அலட்சியம் நம் ஆர்வத்தை முழுதாய்க் களவாடிக்கொள்கிறது. ஆர்வம் இல்லையெனில் தேடலும் இல்லை; சிந்தனைகளும் இல்லை.
ஆல்பெர் காம்யு, ‘நாம் சிந்திக்கும்போதுதான் நிலைகுலைந்துபோகிறோம்’ என்கிறார். அப்படி வியந்து, ஆர்வம் கொண்டு தேடிச் சிந்தித்து, நிலைகுலைந்து, நம் அதுவரையிலான கற்பித்தல்களை இழக்கும்போதுதான் புதிதாய்க் கற்றுக்கொள்கிறோம்.



இப்படியான விஷயங்களைக் கற்றுக்கொடுத்து, ஒரு தேடலை நோக்கி நம்மை நகர்த்தவே கல்வியும் ஆசிரியர்களும் தேவை. இன்றைய வகுப்பறைகள் வதைகூடங்களாய் மாறிய நிலையில், ஏன் குழந்தைகளைப் பள்ளிக்கூடங்களில் சேர்க்க வேண்டும்? இன்று பாடங்களை மட்டும் கற்றுக்கொடுக்க ஆசிரியர்கள் எதற்கு? நாம் ஒவ்வொருவரும் கையில் ஏந்தித் திரியும் செல்போன்கள் ஒரு ஆசிரியரைவிட எல்லா விதங்களிலும் அதிக தகவல்களைத் தர முடியும். வாழ்வை, உறவுகளின் சிக்கல்களை, மனித மேன்மைகளை, மென்னுணர்வுகளைக் கையாளச் சொல்லித்தருவதும் ஒரு ஆசிரியரின் பணிதான் என்பதை நாம் மறந்துவிட்டோம். வெறும் பள்ளிப் பாடங்களை நடத்தி முடிப்பதுடன் ஒரு ஆசிரியரின் பணி முடிந்துவிடவில்லை; அது வாழ்விலும் தொடர வேண்டியிருக்கிறது. என் குடும்பம் எனக்கு ஏற்படுத்திக் கொடுத்த கல்விச் சூழல் வித்தியாசமானது. 10-ம் வகுப்பு வரை திருவண்ணாமலையின் முக்கியப் பிரமுகர்களின் குழந்தைகள் படிக்கும் ஒரு ‘ஹை க்ளாஸ் சிபிஎஸ்இ’ பள்ளியில்தான் படித்தேன். எங்கள் பள்ளியை சொர்க்கம் என்றுதான் சொல்ல வேண்டும்.

அது ஒரு ஜனநாயகப்படுத்தப்பட்ட பள்ளி. எங்கள் எல்லோரின் ப்ரியமும் தனித்துவமும் பாதுகாக்கப்பட்டது. ஆசிரியர்களை ‘அக்கா, அண்ணா’ என அழைக்கும் வழக்கம், மலையேறுதல், குளம், ஏரி மற்றும் மலை சுற்றுப் பாதையைச் சுத்தப்படுத்துதல் எனப் பல அனுபவங்களுடன் நாங்கள் வளர்த்தெடுக்கப்பட்டோம். பள்ளி வளாகத்தில் எங்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு மரத்தைத் தத்துக்கொடுப்பது ஒரு பெரிய வைபவம். ஒவ்வொருவரும் தத்தெடுத்த அந்த மரத்தை வருடம் முழுக்கப் பராமரிப்போம். நீர் ஊற்றி, உரம் வைத்து, மொட்டுகளை எண்ணி, பூக்கள் மலரும் சத்தத்தைக் கேட்க முயல்வோம். வளாகத்தின் மரங்களினூடாகத்தான் நாங்களும் வளர்ந்தோம். சுதந்திரத்தை முழுக்கப் பருகியவர்களாய் அந்த வளாகம் முழுக்க நாங்கள் வியாபித்திருந்தோம். மழை பெய்கையில் பாடத்தைப் பாதியில் நிறுத்தி, மழையின் தாளத்தைக் கேட்கச் சொன்ன ஆசிரியரை எப்படி மறக்க முடியும்?


10-ம் வகுப்பு முடித்ததும் வேறு பள்ளியில் சேர வேண்டும் என்ற நிலையில், எந்த எதிர்வாதமுமின்றி அருகேயுள்ள ஒரு அரசு நிதி உதவி பெறும் பள்ளியில் சேர்ந்தேன். ஆரம்பத்தில் திணறிப்போனேன். நான் பதினைந்து வருடமாய் வாழ்ந்த அதே ஊரில் இப்படி ஒரு உலகம் இயங்குவதை அதுவரை நான் கவனிக்கவேயில்லை. காலையில் என் வீட்டில் நாளிதழ் போடும்போது நான் பார்த்துவிடக் கூடாதென வேகவேகமாய் சைக்கிளை ஓட்டிச் செல்லும் என் வகுப்பு நண்பனை, அப்பாவை இழந்து ஜெராக்ஸ் கடையில் மதிய வேலைக்குப் போகும் தோழிகளை, கொண்டுவந்த ஒரே ஒரு டப்பா சாப்பாட்டில் அடைக்கப்பட்டிருந்த ஒரு துண்டு ஊறுகாயுடனான உணவும், சில நேரங்களில் கெட்டுப்போய் நீர்விட்ட வாடையுடனான அந்தச் சோற்றை எந்தப் புகாருமின்றி சாப்பிடும் நண்பர்களை, ஏதேனும் கல்யாணத்தில் உணவு பரிமாறும் ஒருவனாய் என்னிடமிருந்து மறைந்து நிற்கும் வகுப்புத் தோழனை, அம்மாவுடன் இட்லி கடையில் காலை வேலைகளை முடித்துவிட்டு, பள்ளிக்குத் தாமதமாய் வந்து அடி வாங்குவதை வாடிக்கையாய்க் கொண்டிருந்தவளை, பணம் இல்லாமல் பண்டிகைகளையும் பிறந்த நாட்களையும் எதிர்கொள்ளப் பயப்படும் சக மாணவர்களை எனக்கு அறிமுகப்படுத்தியது என் புதிய அரசுப் பள்ளி வளாகம். அப்பட்டமான மனித வாழ்வை, அசலான வறுமையை நான் அதுவரை பார்த்திடாத வாழ்நிலையைக் கைப்பிடித்து இழுத்துச்சென்று காட்டியது.


நூற்றியறுபது ரூபாய் கொடுத்து பெரிய டைரி மில்க் சில்க் சாக்லேட் வாங்கும்போது, இதுவரை தன் வாழ்வில் ஒரு டைரி மில்க் சாக்லேட்டும் சுவைத்திராத என் தோழியும், இந்த நூற்றியறுபது ரூபாய் இல்லாமல் புத்தகங்களுக்கான நோட்ஸ் வாங்க முடியாததால், மற்றவர்களிடமிருந்து நோட்ஸைக் கடன் வாங்கி பக்கம் பக்கமாய் எழுதி எழுதி வீங்கிப்போன அவள் விரல்கள் என் கண் முன் நிற்கத் தொடங்கின.
பத்தாம் வகுப்பு வரை அதீதப் பராமரிப்புடன் வளர்க்கப்பட்ட நான் காட்டுச்செடிபோல் வளர்ந்திருந்த சக மாணவர்களை வியப்புடன் கவனித்தேன். இந்த மாற்றம் வாழ்வின் மீதான என் மேலோட்டமான புரிதலைத் துடைத்தெறிந்தது. இந்த அனுபவத்தை நான் வகுப்பறைப் புத்தகங்களிடம் ஒருபோதும் கற்றதில்லை. தன் மர்ம மடிப்புகளுக்குள் வாழ்க்கை ஒளித்துவைத்திருக்கும் சவால்களை எதிர்கொள்ள இந்த அனுபவங்களே பாடப் புத்தகங்களைவிட எனக்கு முக்கியமானதாய்த் தோன்றுகிறது. இப்படியான கல்விக் கட்டமைப்பில் மாணவர்களை வெறும் மதிப்பெண்களுக்காக மட்டும் தயாராக்கும் ஆசிரியர்கள் மீது, பெரும் அவநம்பிக்கை ஏற்பட்ட காலத்தில்தான் இரா.நடராஜன் எழுதிய ‘ஆயிஷா’ என்னை வந்தடைந்தாள். நான் அதிகம் வெறுக்கும் இயற்பியல் வகுப்பில் மேசையின் கீழ் மறைத்துப் படிக்கத் தொடங்கியது இன்னும் அப்படியே நினைவில் இருக்கிறது.


ஏனோ ஒவ்வொரு வார்த்தையாய் என்னுள் கரையக் கரைய அந்தப் பக்கங்களில் நான் என்னைக் கண்டெடுத்தேன். அந்தக் கதையில் வரும் ஆயிஷா என்னுள் புதைந்துகிடந்ததை உணர்ந்தேன். ஏதோ ஒரு சிறு உந்துதலில் இதை ஆங்கிலத்துக்கு மொழிபெயர்க்கத் துணிந்தேன். ஆயிஷா உடனான அந்த நாட்களில் என்னை அடையாளம் கண்டுகொண்டேன். ஒன்பதாம் வகுப்பைத் தாண்டாதவளான என் சிநேகிதி தஸ்லீமாவுடன் மொழிபெயர்ப்பு வேலைகளில் ஈடுபட்டேன். என் ப்ரியமான ஆசிரியை சுபா அக்காவின் உதவியுடன் ‘ஆயிஷா’ என் முதல் தொகுப்பாக வெளிவந்தது. ஆயிஷாவை வாசிக்கும் ஒரு ஆசிரியரேனும் தங்கள் வகுப்பறைகளில் நிறைந்திருக்கும் மாணவர்களிலிருந்து ஒரு ஆயிஷாவைக் கண்டெடுக்க முயன்றால், அதுவே இப்புத்தகத்தின் வெற்றியாக இருக்கும்.


நிழலாய் என்னுடன் இருக்கும் சகோதரன் வம்சியின்றி என் வாழ்வில் ஏதும் நிகழ்ந்திடாது. அவனை அண்ணன் என்றோ, நண்பன் என்றோ என்னால் எப்போதும் பிரித்திட முடியாது. வம்சி என்பது நான், அவன் என்னுள் கரைந்தவன். பொது வேலைகள், சமூக வேலைகள், இலக்கியப் பணிகள் என இந்த மொத்த பிரபஞ்சத்துக்காய் வாழ முயலும் என் அம்மாவும் அப்பாவும் கொடுக்க மறந்த அன்பின் கதகதப்பை நான் வம்சியிடம் மீட்டெடுத்தேன். இனி வரும் நாட்களிலும் நான் ஏதேனும் உயரங்களை அடைந்தால், அது அவன் விரல் பிடித்தபடிதான் இருக்கும். என் வாழ்வின் இனிமையான எல்லாப் பக்கங்களும் வம்சிக்கு மட்டுமே சமர்ப்பணம்.
தொடர்புக்கு: maanasiwithdreams@gmail.com

Popular Feed

Recent Story

Featured News