Join THAMIZHKADAL WhatsApp Groups
செயற்கைக்கோள் உதவியுடன் தமிழக அரசின் கல்வி தொலைக்காட்சி மூலம் உலகத்தில் உள்ள அனைவரும் தமிழை கற்க நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக பள்ளி கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.
கிருஷ்ணகிரியில் தமிழியக்கம் சார்பில் "சூட்டி மகிழ்வோம் தூய தமிழ்ப் பெயர்கள்' என்ற நூலின் மேம்படுத்தப்பட்ட புதிய பதிப்பு வெளியீட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்த நிகழ்வுக்கு தமிழியக்கத்தின் தலைவரும் நிறுவனருமான கோ.விசுவநாதன் தலைமை வகித்தார். தமிழியக்கத்தின் பொதுச் செயலாளர் அப்துல் காதர், தென் தமிழக ஒருங்கிணைப்பாளர் மு.சிதம்பரபாரதி, கிருஷ்ணகிரி மாவட்டச் செயலாளர் கருமலைத் தமிழாழன், பொறியாளர் ப.நரசிம்மன், முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி, சட்டப் பேரவை உறுப்பினர்கள் வே.சம்பத்குமார், ஆ.கோவிந்தசாமி, அ.செல்லக்குமார் எம்பி, தமிழக உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். சூட்டி மகிழ்வோம் தூய தமிழ்ப்பெயர்கள் என்ற நூலை, தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் வெளியிட தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் பெற்றுக் கொண்டார்.
இதையடுத்து தமிழியக்கத்தின் தலைவரும் நிறுவனரும் வி.ஐ.டி. வேந்தருமான கோ.விசுவநாதன் பேசியது:
ஒரு நாடு முன்னேற வேண்டும் என்றால் கல்வி அவசியம். உலகத்தில் எந்த நாட்டிற்கும் சென்றாலும், பெயரை அடையாளமாகக் கொண்டே அவரை எந்த நாட்டவர் என அடையாளம் காணப்படுவர். ஆனால், நமது பெயரை வைத்து நாம் யார் என்பது அடையாளம் காண முடியாத நிலை உள்ளது.
தமிழ் மொழியை பொதுமக்களிடம் சேர்த்தவர் அண்ணா. தமிழ்நாட்டிலே தமிழைப் பாதுகாப்பதிலும், அயல் நாட்டிலே தமிழை வளர்ப்போம்.
மும்மொழி கொள்கையின் நோக்கம், திராவிட மொழிகளில் ஒன்றை இந்தி பேசுகின்ற 9 மாநிலங்களில் கற்பிக்க வேண்டும் என்பதே. ஆனால், இந்த மாநிலங்களில் மும்மொழித் திட்டம் நிறைவேற்றப்படவில்லை. இந்த மாநிலங்களில் திராவிட மொழிகளை கற்க வழிவகை செய்தால், நாமும் இந்தி மொழியை கற்க வழிவகை ஏற்படும். இதை மத்திய அரசு செய்ய வேண்டும் என்றார்.
தமிழக உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் பேசியது:தமிழ் மொழியில் பெயர் வைப்பது, நமது இனம், பண்பாடு, காலாசாரம் ஆகியவற்றின் அடையாளங்கள். நமது மரபின் தொடர்ச்சி. இவை எல்லாம் நமது மொழியில் வெளிபடுகிறது. இந்தியாவில் 70 ஆயிரம் கல்வெட்டுகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. அதில் 45 ஆயிரம் கல்வெட்டுகள் தமிழ் மொழியில் உள்ளன. இத்தகைய சிறப்புகளை கொண்டுள்ள நாம், தற்போது தமிழின் சுவையை அறியாமல் அயல் மொழிகளின் மோகம் கொண்டுள்ளோம்.
குழந்தைகளுக்கு தமிழ் மொழியில் பெயர் சூட்டுவது, நமது இனத்துக்கே பெருமை சேர்க்கக் கூடியது என்றார்.
தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேசியது:தமிழ்நாட்டில் உள்ள 8,700 நூலகங்களிலும் தூய தமிழ்ப் பெயர்கள் என்ற நூலை வைக்க அரசு நடவடிக்கை எடுக்கும். தமிழக முதல்வரின் ஒப்புதல் பெற்றபிறகு செயற்கைக்கோள் உதவியுடன் தமிழக கல்விச் சோலை தொலைக்காட்சி மூலம், உலகத்தில் உள்ள தமிழர்கள் தங்களது குழந்தைகளுக்கு தமிழ் கற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும். அதற்கான பணிகளை இரண்டு மாத காலத்துக்குள் நிறைவேற்ற உள்ளோம். விடுமுறை நாள்களில் தமிழ்நாட்டில் உள்ள 37 ஆயிரம் பள்ளிகளில் ஓய்வு பெற்ற தமிழாசிரியர்களைக் கொண்டு தமிழை அழுத்தமாக கற்றுத் தர முதல்வரின் ஒப்புதலுடன் நிறைவேற்றப்படும்.
இதன் மூலம் கிராமங்களில் தமிழின் கலாசாரம், பண்பாட்டை அறிய முடியும். அயல்நாட்டில் உள்ள நூலகங்களுக்கு தமிழ் அறிஞர்களின் நூல்களை அனுப்பி வைக்க அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அயல் நாட்டில் தமிழ் கற்க ஆசிரியர்களையும் அனுப்ப, இந்த அரசு தயாராக இருக்கிறது என்றார்.