Join THAMIZHKADAL WhatsApp Groups
ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு 2019-20 ஆம் கல்வி ஆண்டு முதல் பொதுத்தேர்வினை உறுதிப்படுத்தி தொடக்க கல்வித்துறை வெளியிட்டுள்ள உத்தரவால் படிப்பினை பாதியில் நிறுத்திவிட்டு குடும்ப தொழிலுக்குச் செல்லும் குழந்தை தொழிலாளர் எண்ணிக்கை பெருகும் அபாயம் ஐபெட்டோ அமைப்பு தமிழக அரசுக்கு எச்சரிக்கை.
*******************************
புதிய கல்விக் கொள்கையின் இறுதி அறிக்கையினை மத்திய அரசு வெளியிடுவதற்கு முன்னதாகவே தமிழகத்தில் அமல்படுத்துவதற்கு தீவிரம் காட்டலாமா? ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு 2019-20 ஆம் கல்வி ஆண்டின் இறுதியில் பொது தேர்வு நடத்த வேண்டுமென தொடக்கக் கல்வி இயக்குனரின் செயல்முறை கடிதம் 22.10.2019 இல் வெளியாகியுள்ளது. பார்வை:1 அரசாணை நிலை எண் 164 பள்ளிக்கல்வித்துறை நாள் 13 9 2019 பார்வை:2 மாநில பொதுப்பள்ளி கல்வி தலைவரின் ந.க. எண் 23160/2019 நாள் 15.10.2019 அரசாணையினைப் பின்பற்றி இந்த செயல்முறை கடிதம் வெளியிடப்பட்டுள்ளது.
ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களும் பொதுத்தேர்வு எழுத வேண்டும் என ஒரு தேர்வு மையத்தை தேர்வு செய்வது, வினாத்தாள் தயாரிப்பது, தேர்வு நடத்த ஒரு குழு அமைப்பது என செயல்முறை கடிதத்தில் நீட் தேர்வினை போல் மாணவர்கள் மத்தியில் அச்சுறுத்தப்பட்டு கடிதம் வெளியாகி உள்ளது. அரசாணையும் செயல்முறை கடிதமும் தயாரித்து வெளியிடுவது என்பதில் எவ்வித சிரமமும் இல்லை. ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட தொடக்கப் பள்ளிகள் ஈராசிரியர் பள்ளிகளாகத்தான் இயங்கி வருகின்றன. அதிலும் ஓர் ஆசிரியர் இல்லாமல் ஐந்து வகுப்புக்கும் இருபத்தைந்து பாடங்களை ஒருவரே நடத்தி வருகிறார். 59 மாணவர்கள் உள்ள பள்ளிகளில் 5 வகுப்புகள் 25 பாடங்கள். ஆனால் அங்கு அந்த 2 ஆசிரியர் மட்டுமே பாடங்களை நடத்தி வருகிறார்கள். இஎம்ஐஎஸ் இல் மாணவர்கள் விவரங்களை பதிவு செய்வது, இணையதளம் வழியாக ஆசிரியர்கள் வருகையைப் பதிவு செய்வது, அன்றாடம் அரசின் புள்ளி விவரத்தை தயார் செய்வது, தலைமையாசிரியர் கூட்டத்திற்கு செல்வது, இடைவிடாது பயிற்சியில் கலந்து கொள்வது போன்ற செயல்பாடுகளுக்கே கற்பித்தல் பணியை விட கூடுதலான நாட்கள் செலவழித்து வருகிறார்கள்.
சுயநிதி பள்ளிகளுக்கு அனுப்பி படிக்க வைக்க வசதி இல்லாத ஏழை எளிய குடும்பத்தவரின் பிள்ளைகள் தான் அரசுப் பள்ளியில் படித்து வருகிறார்கள். இவர்களுக்கெல்லாம் நீட் தேர்வை போல,ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் தேர்வைப் போல, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்துகின்ற தேர்வினை போல நடத்தப்போவதாக கற்பனையில் மிதந்து இந்த அரசாணையினையும் செயல்முறைக் கடிதத்தையும் வெளியிட்டு பொதுத்தேர்வு என்ற அச்சத்தினை மாணவர்கள் மத்தியில் விதைத்துள்ளார்கள். பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்களோ தமிழ்நாட்டில் பொதுத்தேர்வினை கட்டாயப்படுத்த மாட்டோம். அவ்வாறு பொதுத்தேர்வு நடத்தினாலும் மூன்றாண்டுகளுக்கு ஃபெயில் செய்யமாட்டோம் என்று செல்லும் இடமெல்லாம் ஊடகங்களுக்கும், செய்தியாளர்களுக்கும் பேட்டி அளித்து வந்தார். ஆனால் கல்வி அமைச்சர் அவர்களின் உறுதி இந்த அரசாணையிலோ, செயல்முறை கடிதத்திலோ எவ்விதப் பதிவும் இல்லை. ஒட்டுமொத்தத்தில் பொதுத்தேர்வு என்ற அச்சுறுத்தலால் ஐந்தாம் வகுப்பிலிருந்து கரை சேராமல் படிப்பை பிள்ளைகள் நிறுத்திவிட்டு அவரவர்கள் குடும்பத் தொழில் பார்ப்பதற்கு சென்று விடுவார்கள்.
எட்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்று ஒன்பதாம் வகுப்பில் சேருகின்ற மாணவர்களின் எண்ணிக்கை மிகவும் குறையும் அபாயம் உருவாகும். இந்தப் பொது தேர்வும், இளங்கலை பட்ட வகுப்புக்கு நுழைவுத் தேர்வும் உறுதிப்படுத்தப்பட்டால் எட்டாம் வகுப்பை தாண்டி ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்புகளில் சேர்ந்து படிப்பதற்கு கூட வாய்ப்பு இல்லாத நிலைமைக்குத் தள்ளப்படுவார்கள். இந்த பொதுத்தேர்வு தொடர்ச்சியாக நீடித்தால் கல்வியறிவு பெறுபவர்களின் சதவீதம் இந்தியாவில் மிகவும் பின்னடைவினை சந்திக்க நேரிடும். அதேபோல் தமிழகம் கல்வித் தரவரிசையில் ஏழாம் இடத்தில் இருப்பது உத்தரப் பிரதேசத்தைப் போல் மிகவும் பின்னோக்கி செல்வதற்கான நிலைமை ஏற்படும். குழந்தை தொழிலாளர் எண்ணிக்கையினை பெருக்குவதற்கான வழிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை முன்னெடுத்துச் செல்கிறது. அன்ன யாவினும் புண்ணியம் கோடி ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல் என்றார் பாரதி.
ஆனால் தமிழக கல்வித்துறை ஏழை எளிய மாணவர்களின் படிப்பினைப் பாழ்ப்படுத்துகிற பாவத்திற்கு ஆளாகிறார்கள். புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவதில் உள்ள அபாயகரமான பாதிப்பினை தமிழக அரசு கருத்தில் கொண்டு கைவிட வேண்டுமென தமிழக ஆசிரியர் கூட்டணியின் சார்பிலும், ஐபெட்டோ அகில இந்திய அமைப்பின் சார்பிலும் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களையும், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அவர்களையும் பெரிதும் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம். இதுதொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் உட்பட அனைத்து அரசியல் கட்சி தலைவர்களையும், கல்வியாளர்களையும் ஆசிரியர் இயக்கங்கள் ஒன்றிணைந்து சந்தித்திட உள்ளோம் என்பதையும் தகவலுக்காக தெரிவித்துக் கொள்கிறோம்.
அறிக்கையினை தொகுத்து அளிப்பவர் வா.அண்ணாமலை,அகில இந்திய செயலாளர், அகில இந்திய துவக்கப்பள்ளி ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு.(All India Federation of elementary teachers organisations) தமிழக ஆசிரியர் கூட்டணி இணைக்கப்பட்டது.
Email: annamalaiaifeto@gmail.com.
Cell: 9444212060.
வா.அண்ணாமலை, ஐபெட்டோ அகில இந்திய செயலாளர்.
*******************************
Email: annamalaiaifeto@gmail.com.
Cell: 9444212060.
வா.அண்ணாமலை, ஐபெட்டோ அகில இந்திய செயலாளர்.