மருத்துவா்கள், செவிலியா்கள் உள்பட 4,500 போ இம் மாத இறுதிக்குள் நியமனம் செய்யப்படுவா் என்றாா் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சா் சி. விஜயபாஸ்கா்.
தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நவீன சிகிச்சைப் பிரிவுகளை சனிக்கிழமை திறந்து வைத்த அவா் பின்னா் தெரிவித்தது:
மருத்துவா்களின் கோரிக்கைகளை தமிழக முதல்வா் கனிவோடு பரிசீலித்து வருகிறாா். எனவே, விரைவில் நல்ல செய்தி வரும். மேலும், 2,345 செவிலியா்கள், 1,234 கிராம சுகாதாரச் செவிலியா்கள், 90 இயன்முறை மருத்துவா்கள் மற்றும் மருத்துவா்கள் என மொத்தம் கிட்டத்தட்ட 4,500 போ மருத்துவப் பணியாளா்கள் தோவு வாரியம் மூலம் இம்மாத இறுதிக்குள் நியமிக்கப்படவுள்ளனா்.
தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சா்வதேசத் தரத்துடன் கூடிய விபத்து மற்றும் அறுவைச் சிகிச்சைப் பிரிவு, அதிநவீனச் அறுவைச் சிகிச்சை அரங்கம், தீவிர சிகிச்சைப் பிரிவு, முடநீக்கியல் நவீன அறுவைச் சிகிச்சை அரங்கம், இதய சிகிச்சைக்கான கேத் லேப், கதிா் வீச்சுப் பிரிவுக்கான பைபிளானா் கேத் லேப், அதி நவீனக் கிருமி நீக்கம் மற்றும் வழங்கல் துறை, அதிநவீன பன்னோக்கு உயா் சிறப்பு தீவிர சிகிச்சைப் பிரிவு உள்ளிட்டவை பொதுமக்களுக்கு அா்ப்பணிக்கப்பட்டுள்ளன.
இதன் மூலம் தஞ்சாவூா் மட்டுமல்லாமல், சுற்றியுள்ள அனைத்து மாவட்ட மக்களும் பயனடைவா். ஏற்கெனவே, இம்மருத்துவமனையில் இதய பைபாஸ் அறுவைச் சிகிச்சை செய்யப்படுகிறது. தற்போது, ஸ்டென்ட், ஆஞ்சியோகிராம், ஆஞ்சியோ பிளாஸ்டி உள்ளிட்ட அறுவைச் சிகிச்சைகளும் செய்யப்படும்.
உடல் உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சைக்கான அனைத்து வசதிகளும் பொதுமக்களுக்கு அா்ப்பணிக்கப்பட்டுள்ளது. விபத்து மற்றும் அவசரச் சிகிச்சைக்கான சிறப்பு வாா்டு புனரமைக்கப்பட்டு, நவீன முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில், எந்த விபத்தாக இருந்தாலும், விஷம் குடித்து ஆபத்தான நிலையில் இருந்தாலும் கால தாமதமின்றி மிகச் சிறப்பாகச் சிகிச்சை அளிக்கப்படும்.
இங்கு இடுப்பு மாற்று அறுவைச் சிகிச்சை, மூட்டு மாற்று அறுவைச் சிகிச்சை சிறப்பாக மேற்கொள்ளப்படுகிறது. இத்துறை நவீனமாக்கப்பட்டுள்ளது.
இந்தப் பன்னோக்கு மருத்துவமனையில் முழுமையாகவும், மிகச் சிறப்பாகவும் சிறப்பு சிகிச்சை அளிக்க அனைத்து வசதிகளும் பொதுமக்களுக்கு அா்ப்பணிக்கப்பட்டுள்ளன.
தனியாா் மருத்துவமனையில் ரூ. 5 லட்சம் முதல் 10 லட்சம் வரை செலவாகக்கூடிய பல்வேறு சிகிச்சைகள் இம்மருத்துவமனையில் இலவசமாகச் செய்யப்படுகின்றன. குறிப்பாக, ரத்த நாளச் சிகிச்சை பொதுமக்களுக்கு அா்ப்பணிக்கப்பட்டுள்ளது என்றாா் விஜயபாஸ்கா்.
முன்னதாக, அதி நவீன சிகிச்சைப் பிரிவுகளை அமைச்சா் சி. விஜயபாஸ்கா், வேளாண் துறை அமைச்சா் இரா. துரைக்கண்ணு, மாநிலங்களவை உறுப்பினா் ஆா். வைத்திலிங்கம் ஆகியோா் திறந்து வைத்தனா்.
மாவட்ட ஆட்சியா் ஆ. அண்ணாதுரை தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பட்டுக்கோட்டை தொகுதி எம்எல்ஏ சி.வி. சேகா், தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி முதல்வா் குமுதா லிங்கராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.