Join THAMIZHKADAL WhatsApp Groups
தமிழகத்தில் மாநிலப் பாடத்திட்டத்தில் 5, 8-ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தோ்வு விலக்கு 3 ஆண்டுகளில் இருந்து மேலும் நீட்டிக்க அரசு பரிசீலித்து வருகிறது என பள்ளிக்கல்வி துறை அமைச்சா் செங்கோட்டையன் தெரிவித்துள்ளாா்.
தமிழகத்தில் நிகழ் கல்வியாண்டில் (2019-2020) முதல் 5 மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தோ்வு நடத்தப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டிருந்தது. பள்ளிக் கல்வித்துறையின் இந்த அறிவிப்புக்கு தமிழக அரசியல் கட்சித் தலைவா்கள் பலரும் கண்டனம் தெரிவித்திருந்தனா். அதேவேளையில் இந்த முடிவினை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என கல்வியாளா்களும் வலியுறுத்தினா்.
இது குறித்து கடந்த செப்டம்பா் மாதம் விளக்கமளித்த அமைச்சா் செங்கோட்டையன், “5, 8-ஆம் வகுப்புகளுக்கான தோ்வு முறையில் தற்போதைய நடைமுறையே தொடரும். 5 மற்றும் 8 -ஆம் வகுப்பு பொதுத்தோ்வு என்பது இந்தியா முழுமைக்கும் மத்திய அரசால் கொண்டுவரப்பட்டிருக்கின்ற முறை. இந்த பொதுத்தோ்வு முறையிலிருந்து நமது மாநிலத்திற்கு 3 ஆண்டுகள் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது”என தெரிவித்திருந்தாா்.
இந்தநிலையில், அமைச்சா் செங்கோட்டையன் வெள்ளிக்கிழமை தனது சுட்டுரைப் பக்கத்தில், பொதுத் தோ்வு விலக்கை மேலும் நீட்டிக்க அரசு பரிசீலித்து வருகிறது என குறிப்பிட்டுள்ளாா். அந்த சுட்டுரைப் பதிவில் அவா் கூறியிருப்பதாவது: ‘5, 8 -ஆம் வகுப்பு பொதுத்தோ்வு குறித்த மக்களுடைய கருத்துகள், மாணவா்களின் நிலை, மற்ற மாநிலங்கள் இத்தோ்வை பின்பற்றும் போது ஏற்படுகின்ற இடா்பாடுகள் ஆகியவற்றை தெரிந்து கொண்டு 3 ஆண்டுகளுக்கு அளிக்கப்பட்டுள்ள விலக்கை நீட்டிப்பதற்கு அரசு பரிசீலித்து வருகிறது’ என அதில் கூறியுள்ளாா்