Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Tuesday, November 5, 2019

தலைசுற்றல் ஏற்பட்டால் பயப்பட தேவையில்லை!


தலைசுற்றல் ஏன் வருகிறது?
தலைசுற்றல் என்பது நோய் அல்ல; அறிகுறி. ரத்த அழுத்தம் அதிகமாக அல்லது குறைவாக இருப்பது, ரத்த சர்க்கரையின் அளவு குறைவது அல்லது அதிகரிப்பது, ரத்தசோகை, கழுத்து எலும்பு தேய்மானம் போன்ற பல காரணங்களால், தலைசுற்றல் ஏற்படலாம். இதில், 1 சதவீதம் பேருக்கு, மூளையில் கட்டி உருவாவதால், தலைசுற்றல் வரலாம். இதுதவிர, உள் காதில் உள்ள திரவத்தின் சமநிலை பாதிக்கப்படுவதால், 'வெர்டிகோ' எனப்படும் தலைசுற்றல் பிரச்னை ஏற்படலாம்.




காதில் ஏற்படும் பிரச்னைகள் என்ன?
உள் காது, நடு காது, வெளிக் காது என, மூன்று பகுதிகள் உள்ளன. உள் காதில் உள்ள நரம்பு பகுதியில், கேட்கும் திறன் உள்ளது. வேகமாக நடப்பது, மெதுவாக செயல்படுவது, உட்கார்ந்து வேலை செய்வது போன்ற, அந்தந்த நிலையை, தகவல்களாக மூளைக்கு தருவது, இந்த நரம்பு பகுதி தான். இதில், ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால், நாம் ஒரு நிலையில் இருந்து, மற்றொரு நிலைக்கு மாறும் போது, ராட்டினத்தில் சுற்றுவது போல் இருக்கும்; வாந்தி வரும். மூளை, காது என, எந்த இடத்தில் பிரச்னை ஏற்படுகிறதோ, அதை பொறுத்து பல்வேறு தொந்தரவுகள் ஏற்படும்.

எப்படி கண்டுபிடிப்பது?
நாம் எந்த நேரத்தில், எந்த நிலையில் இருக்கும் போது, தலைசுற்றல் வருகிறது; எத்தனை நாட்களுக்கு ஒரு முறை வருகிறது; எவ்வளவு நேரம் இருக்கிறது என்பதை பொறுத்தே, அதன் வகையை கண்டுபிடிக்க முடியும். அதோடு, காது தொடர்பான பரிசோதனை செய்து, தலைசுற்றல் வர, 'வெர்டிகோ' தான் காரணமா என்பதை கண்டுபிடிக்க வேண்டும்.




உள் காதில் பிரச்னை வர காரணம்?
நரம்புகள் பலவீனமாக இருப்பது; விபத்து அல்லது வேறு காரணங்களால், காதில் அடிபடுவது; நீண்ட நாட்களாக மருந்து, மாத்திரைகள் சாப்பிடுவது போன்ற வற்றால் பிரச்னை வரலாம். காரணத்தை கண்டறிந்து, அதற்கான சிகிச்சை எடுத்தால் சரியாகி விடும். சில சமயங்களில், காரணம் எதுவும் இல்லாமலும், 'வெர்டிகோ' வரலாம்.அப்படிப்பட்ட நிலையில், அதற்கென பிரத்யேகமாக உள்ள உடற்பயிற்சிகளை செய்தால், வெர்டிகோ சரியாகி விடும். பொதுவாக, வயதானவர்களுக்கே இந்த பிரச்னை வரும். குழந்தைகளுக்கு வருவது அரிது. சிலருக்கு, காதின் நரம்பு பகுதியில், சிறிய கல் போல் உருவாகலாம். அசையும் போது, நமக்கு தலை சுற்றுவது போல தோன்றும். எளிமையான பரிசோதனை மூலம், இதை சரி செய்ய முடியும். வைரஸ் தொற்று ஏற்படுவதாலும், சளி சேர்ந்தும், தலை சுற்றல் வரலாம். இதற்கான மருந்து, மாத்திரைகளை சாப்பிட்டால், சில நாட்களில் தலைசுற்றல் சரியாகி விடும்.




தலைசுற்றலை சமாளிப்பது எப்படி?
தலைசுற்றல், 99 சதவீதம் சாதாரண பிரச்னை தான். தலைசுற்றல் வந்தால், பய உணர்வு வருவதை தவிர்க்க முடியாது. சம்பந்தப்பட்டவரை பார்த்தால், சாதாரணமாக இருப்பது போன்றே தோன்றும்; சொன்னாலும் புரியாது. ஆனால், பிரச்னை இருப்பவருக்கு, தன்னைச் சுற்றி ஏதோ நடப்பது போல், பீதியை ஏற்படுத்தும்.தலைசுற்றல் வந்தால், சில நிமிடங்கள் மட்டுமே இருக்கும். எந்த நிலையில் இருக்கிறோமோ, அதே நிலையிலேயே இருந்தால், சில நிமிடங்களில் சரியாகி விடும்.அப்படி இல்லாமல், பயந்து அங்கும் இங்கும் நிலை கொள்ளாமல் தவித்தால், சரியாவதற்கு கூடுதல் நேரம் பிடிக்கலாம். உட்கார்ந்து இருந்தால், உட்கார்ந்த நிலையிலேயே அமைதியாக இருக்கலாம்; படுக்க வேண்டும் என்பதில்லை. தலைசுற்றல் ஏன் வருகிறது என்பதை புரிந்து கொண்டால், எளிதாக சமாளிக்கலாம்.

- டாக்டர் பி.நடராஜ் காது, மூக்கு, தொண்டை மருத்துவர், சென்னை.

Popular Feed

Recent Story

Featured News