Join THAMIZHKADAL WhatsApp Groups
பாடப்புத்தகத்தை எடுத்து வைத்து படித்துக் கொண்டிருக்கும் போது, திடீரென்று சந்தேகம் வரும். மணியைப் பார்த்தால் இரவு 10 மணியாக இருக்கும். நண்பர்களையோ, ஆசிரியர்களையோ அழைக்க முடியாத நேரம் என்பதால் வேறு வழியின்றி அந்தப் புத்தகத்தை அப்படியே மூடி வைத்து விட்டு வேறு புத்தகத்தை எடுத்துப் படிக்க தொடங்குவோம். இதனால் அந்த பாடத்திலுள்ள அறிவைப் பெற முடியாமல் போய்விடும்.
பாடம் தொடர்பான சந்தேகம் வந்தால் உடனடியாக அதைத் தீர்த்து வைப்பதற்கான வழிகாட்டுதலை வழங்க வேண்டும் என்று நினைத்து புதிய அப்ளிகேஷனை உருவாக்கியுள்ளனர் பீகாரைச் சேர்ந்த இருவர்.
தனுஸ்ரீ, ஆதித்யா ஆகிய இருவர்தான் மாணவர்களுக்கு பயன்படும் இத்தகைய புதிய செயலியை உருவாக்கியுள்ளனர். ஐ.ஐ.டியின் முன்னாள் மாணவர்களான இவர்கள், இருவரும் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக ஆய்வு செய்து இத்தகைய அப்ளிகேஷனை வடிவமைத்துள்ளனர். மாணவர்கள் எழுப்பும் சந்தேகத்திற்கு இவர்கள் உருவாக்கிய அப்ளிகேஷன் 10 நொடியில் தீர்வைத் தந்து விடுகிறது. அந்த பாடத்தோடு தொடர்புடைய படங்களை "கிளிக்' செய்தாலே போதும், அதற்குரிய அத்தனை விவரங்களும் திரையில் வரும் என்கின்றனர். அப்படி அவர்கள் உருவாக்கிய செயலியின் பெயர்தான் டபுட்நட்(Doubtnut app).
பல்வேறு கல்வி நிறுவனங்களில் இவர்கள் மேற்கொண்ட ஆய்வுகளின் மூலம் கணிதம், அறிவியல் பாடங்கள் குறித்த அடிப்படை அறிவு மாணவர்கள் மத்தியில் சரியாகச் சென்றடையவில்லை என தெரிய வந்ததாகக் கூறும் இவர்கள், மாணவர்களின் சந்தேகங்களை தீர்த்து வைக்கும் அப்ளிகேஷனை உருவாக்க அதுவே தூண்டுதலாக அமைந்தது என்கின்றனர்.
"பீகாரில் நடுத்தர குடும்பத்தில் பிறந்த எங்களுக்கு தொழில்நுட்ப கல்வியைப் பெறுவதற்கான சிக்கல்கள் தெரியும். பெரும்பாலும் கட்டணம் வசூலிக்கும் நிறுவனங்கள் மூலம் உயர்தர மாணவர்கள் மட்டுமே சரியான தொழில்நுட்ப அறிவைப் பெற முடிகிறது. இதற்கான மாற்று வழிதான் எங்களின் டபுட்நட். கல்வியின் அடிப்படையான அறிவு அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்டதுதான் இது. மாணவர்கள் இலவசமாக சுயமாக கற்பதற்கான வழியை புதிய அப்ளிகேஷன் உருவாக்குகிறது'' என்கின்றனர் இவர்கள்.
"மற்ற ஆயிரக்கணக்கான கல்வி தொடர்பான பயன்பாடுகள் போலல்ல இது. இந்தியாவின் எந்த மொழியாக இருந்தாலும், பாடப்புத்தகத்திலுள்ள ஒரு படத்தையே அல்லது ஸ்டடி மெட்டீரியலிலுள்ள ஒரு படத்தையோ கிளிக் செய்தால் போதும் 10- விநாடிகளில் அது தொடர்பான விவரங்களை மாணவர்கள் பெற முடியும். பெரும்பாலான மாணவர்கள் கணிதத்தை கற்பதற்கு மிகவும் சிரமப்படுகிறார்கள். அதற்காக நாங்கள் நூற்றுக்ஒளகணக்கான மாணவர்களைச் சந்தித்து அவர்களிடம் எழும் சந்தேகங்களைப் புரிந்து கொண்டு அப்ளிகேஷனை உருவாக்கியுள்ளோம். 10 விநாடிகளில் தீர்வு கிடைப்பதற்காக பல்வேறு புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி அப்ளிகேஷனை உருவாக்கியுள்ளோம்.
இதன் மூலம் தற்போது கணிதம், இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் போன்ற பாடங்களுக்கான தீர்வுகள் வழங்கப்பட்டு வருகின்றன. தீர்வுகளை பெரும்பாலும் ஸ்கிரீன்காஸ்ட் வீடியோக்களின் வடிவத்தில் கொடுக்கிறோம், இறுதி பதிலை எவ்வாறு அடைவது என்பது குறித்த படிப்படியான ஆடியோ வழிமுறைகளுடன் (screencast videos, with step-by-step audio instructions on how to reach the final answer) கூடிய மிகபெரும் "ஆய்வு வீடியோக்களின் களஞ்சியங்களை உருவாக்கியுள்ளோம்.
எங்கள் வீடியோ சேமிப்பில் ஏற்கனவே அரை மில்லியன் வீடியோ தீர்வுகள் உள்ளன; தற்போது 90 சதவீத தீர்வுகள் எங்களிடம் இருக்கின்றன என நம்புகிறோம். வரும் நாள்களில் 95 சதவீத தீர்வுகளை எட்ட முயற்சி மேற்கொண்டு வருகிறோம். வரும் காலங்களில், ஆங்கிலம், சமூக ஆய்வுகள், வணிக ஆய்வுகள், பொருளாதாரம், கணக்கியல் மற்றும் 6ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான அனைத்து பாடங்கள் குறித்த சந்தேகங்களுக்கான தீர்வுகளையும் வழங்கும் வகையில் அப்ளிகேஷனை மேம்படுத்தி விடுவோம்'' என்கின்றனர் நம்பிக்கையுடன்.
வி.குமாரமுருகன்