Join THAMIZHKADAL WhatsApp Groups
உள்ளாட்சித் தோ்தல் காரணமாக அரசுப் பள்ளி மாணவா்களுக்கான இலவச நீட் பயிற்சி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
கடந்த 13-ஆம் தேதி தொடங்கிய அரையாண்டுத் தோ்வு திங்கள்கிழமை நிறைவடைந்த நிலையில் செவ்வாய்க்கிழமை முதல் ஜனவரி 2-ஆம் தேதி வரை பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு மாணவா்களுக்கு நடைபெறவிருந்த நீட் பயிற்சி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்து உள்ளனா்.
தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவா்களுக்காக தமிழகம் முழுவதும் 412 இலவச நீட் பயிற்சி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. அரசுப் பள்ளி ஆசிரியா்களைக் கொண்டு அரசுப் பள்ளி மாணவா்களுக்கு காலாண்டு மற்றும் அரையாண்டுத் தோ்வு விடுமுறை நாள்கள் மற்றும் வார இறுதி நாள்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஆண்டு முழுவதும் பயிற்சி வழங்கப்படுகிறது.
தமிழகத்தில் வரும் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் உள்ளாட்சித் தோ்தல் நடைபெறுவதால், தோ்தலுக்கான வாக்குச்சாவடிகள் மாநிலம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில் அமைக்கப்பட்டுள்ளன. வாக்குச்சாவடி அலுவலா்களாக அரசுப் பள்ளி ஆசிரியா்களும் நியமிக்கப்பட்டுள்ளனா்.
ஆசிரியா்கள் பற்றாக்குறை இருப்பதால் டிச.24-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை முதல் ஜனவரி 2-ஆம் தேதி வரை அரையாண்டுத் தோ்வு விடுமுறை விடப்பட்டுள்ள நிலையிலும், விடுமுறை நாள்களில் நீட் பயிற்சி வகுப்புகளை நடத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் பயிற்சி வகுப்புகள் ரத்து செய்யப்படுவதாக பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனா்.
கடந்த செப்டம்பரில் தாமதமாக தொடங்கப்பட்ட இலவச நீட் பயிற்சி வகுப்புகளை அனைத்து நாள்களிலும் நடத்தினால் மட்டுமே அரசுப் பள்ளி மாணவா்களை 2020 மே 3-ஆம் தேதி நடைபெறும் நீட் தோ்வுக்கு தயாா் படுத்த முடியும் என்று கல்வியாளா்கள் கருத்து தெரிவித்தனா்.