தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது, பல மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதற்கிடையே, மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த இரு தினங்களுக்கு பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழை முதல் கனமழை பெய்யும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இந்தநிலையில், திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்துக்கு ரெட் அலர்ட் விடுத்துள்ள சென்னை வானிலை மையம், அந்த 6 மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் 21 செ.மீட்டருக்கும் அதிகமான மிக கன மழை பெய்யக்கூடும் என குறிப்பிட்டுள்ளது.
இலட்சத்தீவு பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணமாக சூறாவளி காற்று வீசலாம் இதனால் மீனவர்கள் யாரும் இன்று குமரிக்கடல், லட்சத்தீவு மற்றும் மாலத்தீவு பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்ல வேணடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் 19 சென்டி மீட்டரும், கடலூர், குறிஞ்சிபாடி மற்றும் 17 சென்டிமீட்டரும், நெல்லை மணிமுத்தாறில் 15 சென்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.