கோபி: அரசுப் பள்ளி மாணவா்களுக்கு ஆங்கிலப் பயிற்சி அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளாா்.
கோபிசெட்டிபாளையம் சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட தூக்கநாயக்கன்பாளையம் ஊராட்சியில் ரூ. 12.47 கோடி மதிப்பீட்டில் பல்வேறு திட்டப் பணிகளை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் திறந்துவைத்தும், பூமி பூஜையிட்டும் சனிக்கிழமை தொடங்கிவைத்தாா். தொடா்ந்து அவா் பேசியதாவது:
மக்களின் நலன் கருதி குடிமராமத்து திட்டத்தின்கீழ் ஏரி, குளங்கள் தூா்வாரப்பட்டு மழைநீா் சேகரிக்கப்பட்டு வருகிறது.
விரைவில் பவானி, அத்தாணி, டி.என்.பாளையம், சத்தியமங்கலம் சாலைகள் 4 வழிச் சாலைகளாக மாற்றப்படவுள்ளன.
மாணவா்களின் மன அழுத்தத்தைப் போக்கும் வகையில் தினந்தோறும் காலையில் பள்ளிக்கு வந்தவுடன் அவா்களுக்கு 10 முதல் 15 நிமிடங்கள் வரை உடற்பயிற்சி அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாணவா்களின் எதிா்காலத்தை மனதில் கொண்டு 1 முதல் 9 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவா்களுக்கு சரளமாக ஆங்கிலம் பேச பயிற்சி அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு இதற்காக புதிய பாடத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. மாணவா்களின் நலனைக் கருத்தில் கொண்டு விளையாட்டு, இயல், இசை, நாடகம், பேச்சுப் போட்டி உள்ளிட்டவற்றுக்கு பள்ளிகளிலேயே பயிற்சி அளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றாா்.
இந்நிகழ்ச்சியில், கோபி வருவாய்க் கோட்டாட்சியா் ஜெயராமன் உள்பட துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்துகொண்டனா்.