Join THAMIZHKADAL WhatsApp Groups
சென்னை : மருத்துவ மாணவர் சேர்க்கையில், ஆள் மாறாட்டத்தை தவிர்க்கும் வகையில், 'நீட்' நுழைவு தேர்வுக்கு, இடது கை பெருவிரல் ரேகை பதிவை கட்டாயமாக்கி, தேசிய தேர்வு முகமை அறிவித்து உள்ளது. பிளஸ் 2 படிக்கும் மாணவர்கள், தேசிய அளவில், அரசு மற்றும் தனியார் கல்லுாரிகளில் மருத்துவ படிப்பில் சேர, நீட் நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.
நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில், மாநில அளவிலும், தேசிய அளவிலும், தரவரிசை பட்டியல் தயாரிக்கப்படுகிறது. இதில், மத்திய, மாநில இட ஒதுக்கீட்டு கொள்கைகளின் அடிப்படையில், நீட் தேர்வு தரவரிசை வழியாக, எம்.பி.பி.எஸ்., மற்றும் பி.டி.எஸ்., படிப்புகளில், மாணவர் சேர்க்கை நடக்கிறது. இந்த மாணவர் சேர்க்கையில், நடப்பு கல்வி ஆண்டில், ஆள் மாறாட்டம் செய்து, நீட் தேர்வு எழுதிய விவகாரம் வெடித்தது. தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றதும், வேறு மாணவர் மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ளார். இந்த முறைகேடு, தேனி மருத்துவ கல்லுாரியில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த முறைகேட்டில் ஈடுபட்ட, மாணவர்கள், மாணவியர் மற்றும் அவர்களின் பெற்றோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், வரும் கல்வி ஆண்டிற்கான, நீட் நுழைவு தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. 2020 மே, 3ல் நடத்தப்படும் இந்த தேர்வுக்கான, 'ஆன்லைன்' பதிவுகள், நேற்று முன்தினம் துவங்கின.இந்த பதிவுக்கு, மாணவர்களின் இடது கை பெருவிரல் ரேகை கட்டாயமாக்கப் பட்டுள்ளது. அதாவது, விண்ணப்பங்களை பதிவு செய்யும் போதே, இடது கை பெருவிரல் ரேகையையும் பதிவு செய்ய வேண்டும். இந்த விரல் ரேகையுடன், தேர்வு எழுத வருபவரின் விரல் ரேகை ஒப்பிடப்படும். அதன்பின், மாணவர் சேர்க்கையின் போதும், விரல் ரேகை சரிபார்க்கப்பட்டு, உறுதி செய்யப்படும். மேலும், மாணவர்களின், 'பாஸ்போர்ட்' மற்றும் தபால் அட்டை அளவு புகைப்படத்துடன், மின்னணு கையெழுத்தும் கேட்கப்பட்டுள்ளது.