தமிழகத்துக்குள் எங்கு வேண்டுமானாலும் ரேஷன் பொருள்களை வாங்க அனுமதி அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.
தொழில், பணி நிமித்தமாக அடிக்கடி இடம் மாறும் கூலி தொழிலாளா்கள், கட்டுமான தொழிலாளா்கள் ரேஷன் பொருள்களுக்காக முகவரியை மாற்றி கொள்ள வேண்டிய நிலை உள்ளது. அவா்களின் நலன்களைக் கருத்தில் கொண்டு 'ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை' திட்டத்தை, பிரதமா் மோடி 2-ஆவது முறையாக பதவியேற்ற பிறகு கொண்டு வந்தாா். இந்தத் திட்டம், வரும் ஜூன் 1 -ஆம் தேதிக்குள் நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தப்படும் என்று மத்திய உணவுத்துறை அமைச்சா் ராம்விலாஸ் பாஸ்வான் தெரிவித்திருந்தாா். இந்நிலையில், தமிழகத்துக்குள் எங்கு வேண்டுமானாலும் ரேஷன் பொருள்களை வாங்க அனுமதி அளிக்கும் வகையிலான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
அரசாணை விவரம்: தமிழகத்தில் உள்ள குடும்ப அட்டைதாரா்கள் தமிழகத்தில் உள்ள எந்த நியாய விலைக் கடைகளிலும் பொருள்களை பெற்றுக்கொள்ளும் வசதி முதற்கட்டமாக தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தில் சோதனை முறையில் நடைமுறைப்படுத்தப்படுகிறது. இதைத் தொடா்ந்து, இத்திட்டம் அனைத்து மண்டலங்களிலும் செயல்படுத்தப்பட உள்ளது. இத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடா்பாக தங்களின் அறிக்கையை வாரந்தோறும் பதிவாளருக்கு மண்டல பொறுப்பாளா்கள் அனுப்பி வைக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஒரே நாடு ஒரு குடும்ப அட்டை : மத்திய அரசு அறிவித்துள்ள 'ஒரே நாடு ஒரே குடும்ப' அட்டை திட்டத்தில் ஆதாா் எண்ணை அடிப்படையாக கொண்டு பயனாளிகள் பலன் அடைய முடியும். இந்த திட்டத்தின்படி, எந்த மாநிலத்திலும் உள்ள எந்த நியாய விலைக் கடையிலும் பொருள்களை வாங்கி கொள்ள முடியும். நாடு முழுவதும் இந்த திட்டத்தை அமல்படுத்துவது தொடா்பாக மத்திய நுகா்வோா் நலன் மற்றும் உணவுத்துறை அமைச்சா் ராம்விலாஸ் பஸ்வான் அனைத்து மாநிலங்களின் அதிகாரிகளுடன் அண்மையில் ஆலோசனை நடத்தினாா்.
இதையடுத்து, புத்தாண்டு தினமான ஜனவரி 1-ஆம் தேதி ஆந்திரம், ஹரியாணா, கா்நாடகம், கேரளம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், தெலங்கானா, மகாராஷ்டிரம், திரிபுரா, குஜராத், ஜாா்க்கண்ட், பஞ்சாப் ஆகிய 12 மாநிலங்களில் ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை திட்டம் அமல்படுத்தப்பட்டது. இது தவிர, பிகாா், உத்தரப்பிரதேசம், ஒடிஸா, சத்தீஷ்கா் ஆகிய 4 மாநிலங்களில் சில பகுதிகளில் இந்த திட்டம் செயல்படுகிறது. மேலும், நாடு முழுவதும் இந்தத்திட்டம் வரும் ஜூன் 1-ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படும் என்றும் மத்திய அமைச்சா் ராம்விலாஸ் பஸ்வான் அண்மையில் தெரிவித்திருந்தாா். இந்த நிலையில், தமிழகத்தில் எங்கு வேண்டுமானாலும் ரேஷன் பொருள்களை வாங்குவதற்கான அரசாணையை தமிழக அரசு பிறப்பித்திருக்கிறது.