வாக்காளர் அடையாள அட்டையுடன், 'ஆதார்' எண்ணை இணைப்பதற்கு, வழி வகை செய்யும் சட்டத் திருத்த மசோதாவை, வரும் பார்லிமென்ட் கூட்டத்தொடரில் நிறைவேற்ற, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.போலி வாக்காளர்களை கண்டறிந்து, குளறுபடிகளை நீக்கி, சரியான வாக்காளர் பட்டியலை தயாரிப்பதற்காக, தலைமைத் தேர்தல் ஆணையம், கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, வாக்காளர் அடையாள அட்டையுடன், ஆதார் எண்ணை இணைக்க முடிவு செய்து, அதற்கான பணிகளில், தீவிரம் காட்ட துவங்கியது.இதற்காகவே, 2015 ஜனவரியில், அனைத்து மாநில தேர்தல் அதிகாரி களுக்கும், தலைமைத் தேர்தல் ஆணையம், ஒரு கடிதத்தை அனுப்பியது. அதில், ஆதார் எண்களை சேகரித்து, வாக்காளர் அடையாள அட்டை யுடன் இணைக்கும் பணிக்கு தயாராகும்படி கேட்டிருந்தது. ஆனால், இந்த நடவடிக்கைக்கு, அதே ஆண்டின் ஆகஸ்டில், உச்ச நீதிமன்றம் தடை விதித்து விட்டது. முட்டுக்கட்டை உரிய சட்டம் இல்லாமல், ஆதார் எண்களை சேகரிக்க கூடாதென, அந்த உத்தரவில் தெளிவாக கூறப்பட்டுஇருந்ததால், இணைக்கும் பணிக்கு முட்டுக்கட்டை விழுந்தது.இதனால், மறு உத்தரவு வரும்வரை, ஆதார் எண் சேகரிப்பது தொடர்பான அனைத்து பணிகளையும் நிறுத்தி வைக்குமாறு, அனைத்து மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கும், தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.இருப்பினும், இந்த இடைப்பட்ட காலத்தில், 38 கோடி வாக்காளர்களுக்கான ஆதார் எண்கள் சேகரிக்கப்பட்டுவிட்டன.
இவற்றை ஒழுங்குபடுத்தவும், எடுத்துக் கொண்ட குறிக்கோளை நிறைவேற்றவும், மத்திய அரசுக்கு, தலைமை தேர்தல் ஆணையம் சார்பில், பல முறை கடிதங்கள் எழுதப்பட்டன.அவற்றில், 'புதிய வாக்காளர்கள் மற்றும் ஏற்கனவே உள்ள வாக்காளர்களிடமிருந்து ஆதார் எண்களை, கேட்டுப் பெறுவதற்கான அதிகாரத்தை தேர்தல் அதிகாரிகளுக்கு வழங்கும் வகையில், உரிய சட்டத்திருத்தம் கொண்டுவர வேண்டும்' என, வலியுறுத்தப்பட்டன.இந்நிலையில் தான், ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைக்கும் நடவடிக்கையில், மத்திய அரசு தீவிரம் காட்டத் துவங்கியுள்ளது. அதன்படி, மக்கள் பிரதிநிதித்துவ சட்டம், 1951 ல் திருத்தம் கொண்டு வரும் வகையில், சட்ட வரைவு மசோதா தயாரிக்கும் பணிகள் ஆரம்பமாகியுள்ளன.
ஒப்புதல் மத்திய சட்ட அமைச்சகத்தின் உயர் அதிகாரிகள், இதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். சட்ட வரைவு மசோதா தயாரானவுடன், விரைவில், மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்கு, அனுப்பி வைக்கப்படும். வரும், 31ம் தேதி, இந்த ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் துவங்குகிறது. ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைக்க வழிவகை செய்யும் சட்டத் திருத்த மசோதாவை, இந்த கூட்டத்தொடரிலேயே பட்டியலிட்டு, நிறைவேற்ற உள்ளதாக, மத்திய அரசின் தகவல்அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.- நமது டில்லி நிருபர் -