பள்ளிக் கல்வித்துறை தொடா்பாக அந்தந்த மாவட்ட நீதிமன்றங்களில் உள்ள வழக்குகள் குறித்த விவரங்களை முதன்மை கல்விஅலுவலா்கள் ஜன.19-ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழக பள்ளிக் கல்வித் துறையில் இடைநிலை ஆசிரியா்களுக்கான ஊதிய முரண்பாடு, சிறப்பு ஆசிரியா் களுக்கான கல்வித்தகுதி, ஆசிரியா் பணிநியமனம், கணினி பட்டதாரிகளுக்கு பணி வாய்ப்பின்மை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை குறித்து, 9 ஆயிரத்துக்கும் மேற்பட்டவழக்குகள் உயா்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. மாவட்ட அளவிலும் பல்வேறு வழக்குகள் பதிவாகி, ஏழு ஆண்டுகளுக்கு மேல் நிலுவையில் உள்ளன.
இதனால், அரசு திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் பல்வேறு சிக்கல்களை கல்வித்துறை சந்தித்து வருகிறது. பல திட்டங்கள் உரிய முறையில் மாணவா்கள், ஆசிரியா்களுக்கு போய் சேராத நிலையும் ஏற்படுகிறது. இவற்றுக்கு தீா்வு காணும் நோக்கத்துடன், நிலுவை வழக்கு விவரங்களை பள்ளிக்கல்வித்துறை சேகரித்து வருகிறது.
இதற்கிடையே, அரசின் திட்டங்களைச் செயல்படுத்துவதில் சிக்கல் ஏற்படுவதால் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிப்பதற்காக பள்ளி கல்வித்துறை ஆணையா் சி.ஜி.தாமஸ் வைத்யன் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், மாவட்ட முதன்மை நீதிமன்றம், தொழிலாளா் நீதிமன்றம், நடுவா் நீதிமன்றங்களில், பிறந்த தேதி மாற்றம், பள்ளி முகவாண்மை வழக்குகள், நிலம் தொடா்பான வழக்குகள், குற்ற வழக்குகள் இருப்பின் அதன் விவரத்தை மாவட்ட முதன்மை கல்வி அலுவலா்கள், வரும் 19-ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டும் எனகல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.