புதுக்கோட்டை,ஜன.26:ஆசிரியர்கள் தன்னிடம் பயிலும் மாணவர்களை சிறந்தவர்களாகவும் தான் பணிபுரியும் பள்ளியை சிறந்த பள்ளியாகவும் மாற்ற வேண்டும் என புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் த.விஜயலட்சுமி பேசினார்.
புதுக்கோட்டை மாவட்ட ஒருங்கிணைந்த கல்வியின் சார்பில் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கான நிஸ்தா பயிற்சியின் நிறைவு விழா புதுக்கோட்டையில் நடைபெற்றது. விழாவில் கலந்து கொண்டு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் த.விஜயலட்சுமி பேசியதாவது: மாணவர்களுக்கு ஆசிரியர்கள் தரமான கல்வியைக் கற்றுக் கொடுக்க வேண்டும் என்ற நோக்கில் தலைமைப்பண்பு,பள்ளி வளர்ச்சிக்கு தேவையான திட்டமிடல்,கலையோடு இணைந்த கல்வி,தகவல் தொழில்நுட்பம், போன்றவை குறித்து தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு நிஸ்தா பயிற்சி அளிக்கப்படுகிறது.ஆசிரியர்கள் மாணவர்களிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டிய விஷயங்கள் நிறைய உள்ளன.
கரும்பலகை ,சாக்பீஸ் வைத்துக் கொண்டு பாடம் நடத்தினால் போதாது.தொழில்நுட்பங்களை தெரிந்து வைத்திருக்க வேண்டும்.அப்பொழுது தான் மாணவர்களை வகுப்பறையில் உட்கார வைக்க முடியும்.உங்களிடம் கற்கும் மாணவர்களுக்கு நீங்கள் தான் முன்மாதிரி.எனவே உங்களது பொறுப்பை உணர்ந்து ஆசிரியர்களாகிய நீங்கள் தினமும் வீட்டிலேயே பாடம் நடத்துவதற்கு தேவையான கற்றல் கற்பித்தல் மாதிரிகளை தயார் செய்து கொண்டு வந்து வகுப்பறையில் பாடம் நடத்த வேண்டும்.ஆசிரியர்கள் மாணவர்களை சரியான பாதைக்கு அழைத்துச் செல்ல வேண்டும்..சரியான தகவல்களையும்,சரியான பயிற்சியையும் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு கொடுக்க வேண்டும்.வகுப்பறையில் ஆசிரியர்கள் குழந்தையோடு குழந்தையாக சேர்ந்து பயிற்சி அளிக்க வேண்டும்.பயிற்சியில் பெறப்படும் விஷயங்களை சரியான முறையில் வகுப்பறைக்குள் எடுத்துச் செல்ல வேண்டும்..பயிற்சியில் பெற்ற தகவல்களை வகுப்பறையில் எவ்வாறு செயல்படுத்தி உள்ளீர்கள் என்பதை ஆய்வு செய்ய கல்வித்துறை அதிகாரிகள் வருவார்கள்.எனவே கற்றல் கற்பித்தலில் புதுமைகளை புகுத்துங்கள்.மேலும் ஆசிரியர்கள் தன்னிடம் பயிலும் மாணவர்களை சிறந்தவர்களாகவும் தான் பணிபுரியும் பள்ளியை சிறந்த பள்ளியாகவும் மாற்ற வேண்டும் என்றார்.
ஒருங்கிணைந்த கல்வியின் உதவி திட்ட அலுவலர் இரவிச்சந்திரன் வாழ்த்துரை வழங்கினார்.
பயிற்சியின் கருத்தாளர்களாக மாவட்ட ஆசிரியர் பயிற்சி மற்றும் கல்வி நிறுவன விரிவுரையாளர் தனசேகரன்,வட்டார வளமைய பயிற்றுநர்கள் பரிசுத்தம் ,வசந்தி,ஜெயந்தி ,சக்திவேல் பாண்டி,அருண்குமார் ஆகியோர் செயல்பட்டனர்.
விழாவில் அன்னவாசல் வட்டார வளமைய மேற்பார்வையாளர் ஆ.கோவிந்தராஜ்,பொன்னமராவதி வட்டார வளமைய மேற்பார்வையாளர் செல்வக்குமார் மற்றும் வட்டார பயிற்சி ஒருங்கிணைப்பாளர்கள் பாரதிதாசன்,முத்துராஜ்,சின்னையா ஆகியோர் கலந்து கொண்டனர்.
விழாவிற்கான ஏற்பாடுகளை மாவட்ட பயிற்சி ஒருங்கிணைப்பாளர் மெ.ரெகுநாததுரை செய்திருந்தார்.
பயிற்சியில் பொன்னமராவதி,குண்றாண்டார் கோவில்,திருமயம் ,அன்னவாசல் ஆகிய ஒன்றிங்களைச் சேர்ந்த 150 தலைமை ஆசிரியர்கள்,ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.முடிவில் நிஸ்தா பயிற்சி அளித்த கருத்தாளர்களுக்கு கேடயம் வழங்கியும் பொன்னாடை அணிவித்தும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் த.விஜயலட்சுமி பாராட்டினார்..பின்னர் பயிற்சியில் கலந்து கொண்ட ஆசிரியர்கள் அனைவருக்கும் பயிற்சிக்கட்டகம் வழங்கப்பட்டது ..